நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 29 Aug 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை வெட்டிக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது. மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் ஜெயராமன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முனிரத்தினம் (33) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

கணவன்-மனைவி இருவரும் ஓசூரில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர். ஜெயராமனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பெரியூருக்கு 2 பேரும் வந்தனர். பண்டிகை முடிந்த பின்னர் ஜனவரி 18-ந்தேதி மீண்டும் ஓசூருக்கு முனிரத்தினம் புறப்பட்டார்.

அப்போது அங்கே செல்ல வேண்டாம் என்று மனைவியை ஜெயராமன் தடுத்தார். இதனால் இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன் வீட்டில் இருந்த அரிவாளால் முனிரத்தினத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இதைத்தொடர்ந்து ஜெயராமன் வீட்டை விட்டு வெளியேறி அந்த பகுதியில் உள்ள காட்டில் தலைமறைவாக இருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் அங்கு சென்று ஜெயராமனை கைது செய்தனர். இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் முடிவில் ஜெயராமன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி பரமராஜ் நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story