ஊத்துக்கோட்டை அருகே ஏரியில் எல்லை அமைப்பதில் இரு கிராம மக்களிடையே தகராறு துணை போலீஸ் சூப்பிரண்டு சமரசம்


ஊத்துக்கோட்டை அருகே ஏரியில் எல்லை அமைப்பதில் இரு கிராம மக்களிடையே தகராறு துணை போலீஸ் சூப்பிரண்டு சமரசம்
x
தினத்தந்தி 29 Aug 2019 11:15 PM GMT (Updated: 29 Aug 2019 5:03 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே ஏரியில் எல்லை அமைப்பதில் இரு கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்கவாக்கத்தில் 430 ஏக்கர் நில பரப்பில் இசா ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து அருகே உள்ள தொளவேடு, தும்பாக்கம், தொட்டாரெட்டிகுப்பம், பருத்துமேனிகுப்பம், காக்கவாக்கம், வண்ணான்குப்பம் பகுதிகளில் உள்ள 1,432 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இசா ஏரியில் தூர் வாரி கரைகளை பலப்படுத்த, மதகுகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு தற்போது குடிமராமத்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்றனர். அப்போது தொளவேடு கிராமத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அங்கு திரண்டு வந்து ஏரியில் எங்கள் கிராமத்துக்கும் பங்கு உண்டு. ஆகையால் எல்லை அமைத்து தர வேண்டும் என்றனர்.

அதற்கு அதிகாரிகள் தங்களது பதிவேடுகளில் காக்கவாக்கம் இசா ஏரி என்றுதான் பதிவாகி உள்ளது. எல்லை சம்பந்தமாக எங்களுக்கு எதுவும் தெரியாது. ஊத்துக்கோட்டையில் உள்ள நில அளவை அதிகாரிகளை தொடர்பு கொண்டு எல்லை பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள் என்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொளவேடு கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் பிரித்விபாலசுந்தரம், தாசில்தார் செல்வகுமார், மண்டல துணை தாசில்தார் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் யுகந்தர், கிராம நிர்வாக அலுலர்கள் அருள், சடையப்பன் ஆகியோர் ஏரியில் எல்லை கல் நட்டனர். இதற்கு காக்கவாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தஸ்தாவேஜுகளில் காக்கவாக்கம் இசா ஏரி என்று தெளிவாக உள்ளது. எதன் அடிப்படையில் தொளவேடு கிராமத்துக்கு எல்லைக் கல் நட்டீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்குள் தொளவேடு கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இரு கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டது.

தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலிஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். எல்லைக் கல் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் உத்தரவிட்டார். ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் விரைவில் உயர்மட்ட அதிகாரிகளின் முன்னிலையில் எல்லை விவகாரம் குறித்து பேசி முடிவு எடுக்கலாம் என்று அறிவித்தார். இதை இரு கிராம மக்களும் ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story