டி.வி. பெட்டியை தலையில் போட்டு வாலிபர் கொலை: ஐஸ் கம்பெனி ஊழியருக்கு ஆயுள் தண்டனை


டி.வி. பெட்டியை தலையில் போட்டு வாலிபர் கொலை: ஐஸ் கம்பெனி ஊழியருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 29 Aug 2019 10:15 PM GMT (Updated: 29 Aug 2019 6:56 PM GMT)

டி.வி. பெட்டியை தலையில் போட்டு வாலிபரை கொன்ற வழக்கில் ஐஸ் கம்பெனி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பட்டுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா எருக்காணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அரங்குளவன். இவரது மகன் செந்தில்குமார் (வயது 26). இவர்கள் குடும்பத்துடன் பட்டுக்கோட்டை தாலுகா இரண்டாம்புளிக்காடு கிராமத்திற்கு வந்து 7 வருடங்களாக கலியபெருமாள் என்பவரின் வீட்டு மாடியில் தங்கி இருந்து திருவிழாக்காலங்களில் பொம்மை, வளையல் வியாபாரம் செய்து வந்தனர்.

செந்தில்குமார், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே ஐஸ் கம்பெனியில் பட்டுக்கோட்டை கீழப்பாளையம் ஆதி தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் முத்துப்பாண்டியும்(30) வேலை பார்த்து வந்தார். வெளியூர் சென்று ஐஸ் விற்பனை செய்து வந்ததில் செந்தில்குமாருக்கும், முத்துப்பாண்டிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

டி.வி.பெட்டியை தலையில் போட்டு கொலை

கடந்த 11.9.2017-ந் தேதி மாலை 3 மணி அளவில் செந்தில்குமார், இரண்டாம்புளிக்காடு கிராமத்தில் உள்ள தான் தங்கி இருந்த வீட்டு மாடியில் இருந்தார். அப்போது முத்துப்பாண்டி அங்கு வந்தார். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

முத்துப்பாண்டி கைகளால் செந்தில்குமாரை கண் மற்றும் மூக்கில் குத்தி காயப்படுத்தியுள்ளார். மேலும் கீழே விழுந்த செந்தில்குமாரின் தலையில் அருகில் இருந்த டி.வி.பெட்டியை தூக்கிப்போட்டு தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமார் தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் அதே பகுதியை சேர்ந்த மணிமேகலை என்பவர் புகார் செய்தார். புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார், முத்துப்பாண்டியை கைது செய்து பட்டுக்கோட்டை 3-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ரவீந்திரன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், முத்துப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லெட்சுமணன் ஆஜராகி வாதாடினார்.


Next Story