கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீதிபதி பேச்சு


கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 30 Aug 2019 4:15 AM IST (Updated: 30 Aug 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீதிபதி மோகனாம்பாள் கூறினார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பாரதமாதா சேவை நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. முகாமிற்கு திருவாரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான மோகனாம்பாள் தலைமை தாங்கி, அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் 18 வயது நிரம்பிய பிறகும், ஆண்கள் 21 வயது நிரம்பிய பிறகும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கட்டாயமாக வேலைக்கு அமர்த்துதல் கூடாது. 14 முதல் 18 வயதுடைய குழந்தைகளை பஞ்சு ஆலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்ற ஆபத்தான இடங்களில் வேலைக்கு அமர்த்த கூடாது.

நச்சுக்காற்று

இந்த தொழிற்சாலைகளில் உண்டாகும் தூசுகளாலும், நச்சுக்காற்றுகளாலும் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையினை தடுக்க வேண்டும்.

பள்ளியில் சேர்ந்து இடைநின்ற குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி கட்டாயமாக கல்வி கற்க செய்ய வேண்டும். கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சமுதாய கூடம்

வீரன்நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதும் வீடுகள், காற்று மழையினால் அதிகம் பாதிக் கப்படுகிறது. வீடுகளுக்கு இலவச பட்டா, முதியோர் கள், விதவைகள், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் இழந்தவர்கள் போன்ற பலருக்கும் முறையான அரசின் உதவிகள் கிடைக்க பெறாமல் உள்ளது என்பது தெரியவருகிறது. இவர்களுடைய கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக குழுவாக இணைந்து வட்ட சட்ட பணிகள் குழுவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான சமுதாய கூடம் கட்டித்தர உரிய அரசுத்துறையிடம் பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சங்கீதாமணிமாறன், ஆரோக்கியசாமி, சைல்டுலைன் அமைப்பை சார்ந்த செந்தில்குமார், குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் மணிமாறன், பாரதமாதா சேவை நிறுவன ஆற்றுப்படுத்துனர்கள் சிவசங்கரி, சுகன்யா, ரவிச்சந்திரன், சுலோச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பாரதமாதா சேவை நிறுவன இயக்குனர் எடையூர் மணிமாறன் நன்றி கூறினார்.

Next Story