பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? கோவையில் 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களா? என்ற சந்தேகத்தின் பேரில் கோவையில் 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி 5 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் உள்பட மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை,
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதியுடன் கோவையை சேர்ந்த இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி கோவையை சேர்ந்த 6 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோருக்கு தடை செய்யப்பட்ட இயக்கமான ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் இவர்கள் 2 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி உள்ளனர். இது தவிர ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களையும் தேர்வு செய்துள்ளனர். தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முகமது அசாருதீன் மற்றும் ஷேக் இதயத்துல்லா ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்தனர்.இதேபோன்று கோவையில் உள்ள சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) போலீஸ் அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி கோவை தெற்கு உக்கடம் அன்புநகரை சேர்ந்த ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தி, பென்டிரைவ், செல்போன்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.விசாரணையில், அவர்கள் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் என்பதும், பயங்கரவாத கருத்துகளை பரப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திகொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக மத்தியஉளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகள் கோவையில் தங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவையில் 4 நாட்களாக இருந்து வந்த போலீஸ் பாதுகாப்பு அதன்பின்னர் தளர்த்தப்பட்டது.
இதற்கிடையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் தலைமையில் 5 குழுக்களாக நேற்றுக்காலை 5.30 மணிக்கு கோவை வந்தனர். அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் வாரண்டு பெற்று வந்தனர்.
அந்த வாரண்டை காட்டி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த உமர் பாரூக்(வயது 32), கோவை வின்சென்ட் சாலை வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த சனாபர் அலி(24), அதே பகுதியை சேர்ந்த சமேசா முபின்(27), உக்கடம் பிலால் எஸ்டேட்டை சேர்ந்த முகமது யாசின்(26), கோவை பள்ளி வீதியை சேர்ந்த சதாம் உசேன்(27) ஆகிய 5 பேர் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். கோவை மாநகர போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனை காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நீடித்தது.
இந்த சோதனையில் ஒரு மடிக்கணினி, 5 செல்போன்கள், 4 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு, 8 சி.டி.க்கள் மற்றும் டி.வி.டி.க்கள் மற்றும் ஆட்சேபகரமான நோட்டீசுகளையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து 5 பேரையும் கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். அங்கு இரவு வரை விசாரணை நடந்தது.
இவர்களில் உமர் பாரூக் ஆட்டோ டிரைவர். சனாபர் அலி மார்க்கெட்டில் காய்கறி கடையில் வேலை செய்கிறார். சமேசா முபினும், சதாம் உசேனும் புத்தக கடையில் வேலை செய்கிறார்கள். முகமது யாசின் நாட்டு மருந்து கடையில் வேலை செய்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் 5 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை.
இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதி ஜக்ரன் ஹசீம் என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் மற்றும் ஷேக் இதயதுல்லா ஆகியோருடன் இவர்கள் 5பேரும் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் முகமது அசாருதீன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த 5 பேரும் முகமது அசாருதீனோடு மட்டுமல்லாமல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தார்களா? என்றும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தநிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தீவிர விசாரணைக்கு பிறகு உமர்பாரூக், சனாபர்அலி, சமேசா முபின், முகமது யாசின், சதாம் உசேன் ஆகிய 5 பேரும் இரவில் விடுவிக்கப்பட்டனர்.சதாம் உசேன், முகமது யாசின் ஆகிய 2 பேருக்கு சம்மன் வழங்கி கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டனர். விடுவிக்கப்பட்ட 5 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து 4 நாட்களாக கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கமாண்டோ படை வீரர்களும் ரோந்து சுற்றி வந்தனர். இதனால் கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே பீதி நிலவியது.
தற்போது நிலைமை சீராகியுள்ளது. இந்த நிலையில் கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேரின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தி மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story