நிலச்சரிவால் சாலை சேதம்: அவலாஞ்சியில் சூழல் சுற்றுலா ரத்து
நிலச்சரிவால் சாலை சேதம் அடைந்ததால், அவலாஞ்சியில் சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்து வருகிறது. சமீபகாலமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதால், தாமதமாக தொடங்கும் பருவமழை குறுகிய நாட்களில் அதிகமாக பெய்து விடுகிறது. காடுகள் அழிக்கப்படுதல் மற்றும் வெப்பமயமாதலால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஒரு ஆண்டு மழை பெய்யும். அதற்கு அடுத்த 2 ஆண்டுகள் மழை இல்லாமல் வறட்சி நிலவும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
மலைப்பிரதேசமான நீலகிரியில் இம்மாத தொடக்கத்தில் ஒரு வாரம் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக இயற்கை அழகுடன் பசுமையாக காணப்பட்ட விவசாய விளைநிலங்கள், வனப்பகுதிகள் சரிந்து விழுந்து தனக்கே உரித்தான அழகை இழந்தன. குறிப்பாக மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சியில் அடுத்தடுத்த நாட்களில் 82 சென்டி மீட்டர், 91 சென்டி மீட்டர் என அதிகபட்சமாக மழை கொட்டி தீர்த்தது. நீலகிரி மாவட்டத்திலேயே இதுவரை பெய்த அதிகபட்ச மழை அளவு இதுவாகும். இந்த மழையால் அடர்ந்த வனப்பகுதியான அவலாஞ்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவால் அவலாஞ்சி-எமரால்டு சாலையின் ஒருபுறத்தில் சாலையே தெரியாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் சென்றது. அதில் வனப்பகுதியில் ஓங்கி வளர்ந்து காணப்பட்ட பல மரங்கள் வேரோடு அடித்து செல்லப்பட்டன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை, பசேல் என காட்சி அளித்த பகுதி, மழைக்கு பின்னர் சில இடங்களில் மரங்கள், செடிகள் இல்லாமல் வெட்ட வெளியாக காணப்படுகிறது. அவலாஞ்சியில் பாறைகள், மரங்கள் விழுந்ததால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவலாஞ்சியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வந்தது.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் அவலாஞ்சி செல்ல தவறியது இல்லை. அங்கு மலை உச்சியில் பவானியம்மன் கோவில், லக்கிடி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். கனமழையால் அந்த சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் நிலைகுலைந்து காணப்படுகிறது.
இந்த சாலையை சீரமைக்க சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனால் சூழல் சுற்றுலா ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மழைக்கு பின்னர் தற்போது வரும் சுற்றுலா பயணிகள் அவலாஞ்சி சூழல் சுற்றுலாவுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சாலையை விரைவில் சீரமைத்து சூழல் சுற்றுலாவை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story