தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- ரூ.1 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- ரூ.1 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Aug 2019 3:30 AM IST (Updated: 30 Aug 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

மாத்தூர் அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விராலிமலை,

திருநெல்வேலி மாவட்டம், பழங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 42). இவர் புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே உள்ள தேவளி கிராமத்தில் சொந்தமாக இடம் வாங்கி அதில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளார். இதன்மூலம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் மினரல் வாட்டர் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும் ராஜா அங்கேயே வீடுகட்டி தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் ராஜா தனது சொந்த ஊரான பழங்குளத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 25-ந்தேதி குடும்பத்துடன் சென்றிருந்தார். வீட்டில் ராஜாவின் சகோதரி மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகிய 2 பேர் இருந்தனர்.

நகை-பணம் கொள்ளை

இந்நிலையில் கடந்த 27-ந்தேதி இரவு ராஜாவின் சகோதரியும், பணிப்பெண்ணும் இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் கீழ்தளத்தில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கினர். அப்போது வீட்டில் இருந்த 2 நாய்கள் குறைத்தது. சத்தத்தை கேட்டு ராஜாவின் சகோதரி எழுந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் மேல்தளத்தில் சென்று பார்த்த போது, அங்கு இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ராஜாவிற்கு செல்போனில் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் ராஜா வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் பீரோவை சோதனை செய்து பார்த்த போது, பீரோவில் இருந்த 10பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் கொடுத்தார். அதன்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் ஹெல்மெட் போட்ட 3 மர்மநபர்கள், முகமூடி அணிந்த ஒரு நபர் உள்பட 4 மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்வது போன்று காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story