நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிகாரியிடம் பணம் திருட்டு - டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு


நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிகாரியிடம் பணம் திருட்டு - டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Aug 2019 4:00 AM IST (Updated: 30 Aug 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில்வே அதிகாரியிடம் பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை, 

சென்னையில் ரெயில்வே துறையில் முதுநிலை என்ஜினீயராக பணிபுரிந்து வருபவர் ஜேசுராஜ் (வயது 56). இவர் கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக புறப்பட்டு வந்தார்.

அவர் நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவில்பட்டிக்கு பயணம் செய்தார். குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்த அவர் அருகில் கைப்பையை வைத்திருந்தார். மதுரை திருப்பரங்குன்றத்தை கடந்து வந்த போது அவருடைய கைப்பையை காணவில்லை. அதில் ஜேசுராஜ் ரூ.20 ஆயிரம் பணம் வைத்திருந்தார்.

அவர் அந்த பையை தேடிப்பார்த்த போது அந்த பெட்டியில் ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் பழனி மட்டும் பணியில் இருந்துள்ளார். எனவே அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் உடனடியாக அந்த பெட்டிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஜேசுராஜின் பை மட்டும் கிடைத்தது. அதிலிருந்த ரூ.20 ஆயிரத்தை காணவில்லை. டிக்கெட் பரிசோதகர் பையில் இருந்த பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஜேசுராஜ் மற்றும் டிக்கெட் பரிசோதகர் பழனி ஆகிய 2 பேரும் நெல்லைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்காக நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து ஜேசுராஜ் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் பழனி மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் திருடப்பட்ட விதம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரே பணத்தை திருடினார்? என்ற பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story