கல்வி உதவி தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பாலிடெக்னிக் மாணவர்கள் முற்றுகை
கல்வி உதவி தொகை கேட்டு, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பாலிடெக்னிக் மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மாணவர்கள் சீருடையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். அவர்கள், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் துரைப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் மாணவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானவர்கள் படித்து வருகிறார்கள். எங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கல்வி உதவி தொகை வழங்கப்படவில்லை.
படிப்பை முடிக்கும் மாணவர்கள் ரூ.45 ஆயிரம் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. எங்களால் அந்த கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். மேலும் தற்போது படித்து கொண்டு இருக்கும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூல் செய்து வருகிறது. தமிழக அரசின் அரசாணை 9-ஐ அமல்படுத்த வேண்டும். கல்வி உதவி தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story