குற்றாலம் மெயின் அருவியில் குளித்த சுற்றுலா பயணி திடீர் சாவு - மூச்சுத்திணறியதால் பரிதாபம்
குற்றாலம் மெயின் அருவியில் குளித்த சுற்றுலா பயணி திடீரென மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி,
கும்பகோணத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 74). இவர் தனது மனைவி சந்திராவுடன் குற்றாலத்துக்கு நேற்று முன்தினம் மாலையில் வந்திருந்தார். இங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கினார்கள்.
நேற்று காலை 8 மணியளவில் ராமலிங்கமும், சந்திராவும் குற்றாலம் மெயின் அருவிக்கு குளிக்க சென்றனர். அருவியில் ராமலிங்கம் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சுற்றி சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். ராமலிங்கம் வெளியே வர முயற்சி செய்து உள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. வயது முதுமை காரணமாக உடனடியாக அவரால் வெளியேற முடியவில்லை. இதனால் மூச்சுத்திணறி அங்கேயே கீழே விழுந்தார். உடனே அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவரை வெளியே தூக்கி வந்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
குற்றாலத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஐந்தருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது சிறு சிறு கற்கள் விழுந்தன. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மற்ற அருவிகளுக்கு சென்று குளித்தனர்.
நேற்று காலை ஐந்தருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.
Related Tags :
Next Story