நிலத்தடி நீர் உயருவதற்கு மழைநீரை சேமிக்க வேண்டும்; மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் பேச்சு
நிலத்தடி நீர் உயருவதற்கு மழைநீரை சேமிக்க வேண்டும் என்று மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் கந்தசாமி பேசினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தாலுகா பொற்குணம் மதுராகாரப்பள்ளம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி வரவேற்றார். முகாமில் 1,014 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மழைநீரை நாம் சேமிப்பதில்லை. கிராமங்களில் உள்ள குளம், குட்டை, ஆறுகள் தான் உங்களின் பலம். அதை அழித்தால் பலவீனம். சமுதாயத்திற்கு பலன் தருவதை நாம் அழித்தால் முன்னேற முடியாது. நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியதை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் கிராமங்கள் அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
தற்போது குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்கள், ஊரணிகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ள பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை ஏற்படவில்லை. கிராமங்களை வாழ வைப்பதும், அழிப்பதும் உங்களிடம் தான் உள்ளது. வாழ்வதற்கு உகந்த இடமாக கிராமங்களை நாம் தான் உருவாக்க வேண்டும்.
விவசாயத்திற்காக 70 சதவீதம் நீர் செலவிடப்படுகிறது. விவசாயத்தில் தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிகமாக சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தும் மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. நிலத்தடி நீர் உயருவதற்கு மழை நீரினை நாம் அனைவரும் சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கலெக்டர் கந்தசாமி முகாம் நடைபெற்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டார். அதைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் ஆகிய துறைகளின் மூலம் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.
இதனையடுத்து பொற்குணம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் நார்த்தாம்பூண்டி ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story