“மாஜிஸ்திரேட்டு உத்தரவை புழல் சிறை கண்காணிப்பாளர் தவறாக புரிந்துள்ளார்” மீண்டும் கைது செய்யாதது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி
2 இலங்கை வாலிபர்களை விடுவித்தது தொடர்பான விவகாரத்தில் மாஜிஸ்திரேட்டு உத்தரவை, புழல் சிறை கண்காணிப்பாளர் தவறாக புரிந்து கொண்டு விடுத்துள்ளார் எனவும், எனவே அந்த 2 பேரை மீண்டும் கைது செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மதுரை,
இலங்கையை சேர்ந்தவர்கள் சங்கசிரந்தா (வயது 34), முகமது சப்ராஸ் (33). இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். பின்னர் தமிழகத்தை சேர்ந்தவர்களின் பெயர்களில் போலி ஆதார் கார்டு தயாரித்து, இங்கு சுற்றித்திரிந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரையும் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும்போது, மனுதாரர்கள் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், சிறை அதிகாரி, அரசு வக்கீல் ஆகியோர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், ராமநாதபுரம் மாவட்ட 2-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராதாகிருஷ்ணன், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, ராமநாதபுரம் கோர்ட்டு அரசு வக்கீல் விஜயலட்சுமி ஆகிய 5 பேரும் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்கள்.
குற்ற வழக்குகளில் தொடர்பு
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சங்கசிரந்தா மீது இலங்கையில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது, கடந்த 2012-ம் ஆண்டில் 2 கொலை வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு அங்கு அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். கற்பழிப்பு வழக்குகளிலும் தொடர்புடையர். அவர், டிரைவர் முகமது சப்ராஸ் உடன் சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளார். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இலங்கை தூதரகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கேணிக்கரை போலீசார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு கடந்த 13-ந்தேதி உத்தரவிட்டுள்ளார். அதாவது, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவை புழல் சிறை கண்காணிப்பாளர் தவறாக புரிந்து கொண்டு, அவர்களை சிறையில் இருந்து கடந்த 18-ந்தேதி விடுவித்துள்ளார். ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவை அடுத்து, அவர்கள் இருவரையும் இலங்கை தூதரகத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இது நடைபெற்று 11 நாட்கள் ஆகியும், இதுவரை அவர்களை மீண்டும் கைது செய்யாதது ஏன்?
மேலும், தேடப்படுபவர்கள் என்று ‘லுக் அவுட் நோட்டீஸ்’ ஒட்டுவதற்கு கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக கியூ பிராஞ்ச் போலீஸ் சூப்பிரண்டு, புழல் சிறை கண்காணிப்பாளர், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரும், உள்நாட்டு பாதுகாப்புத்துறை டி.ஐ.ஜி.யும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாளை (அதாவது இன்று) நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story