அரூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.25½ லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் மலர்விழி வழங்கினார்


அரூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.25½ லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் மலர்விழி வழங்கினார்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:00 AM IST (Updated: 30 Aug 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே எஸ்.தாதம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.25½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

அரூர், 

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா தீர்த்தமலை உள்வட்டம் எஸ்.தாதம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். 155 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 64 ஆயிரத்து 316 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்கும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் இதுபோன்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்கள் தர்மபுரியிலிருந்து 110 கி.மீ தொலைவிற்கு வருகை தந்து அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்கவுரை ஆற்றியுள்ளார்கள். மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 36 ஆயிரத்து 500 மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 323 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 993 மதிப்பிலும் உள்பட மொத்தம் 155 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 64 ஆயிரத்து 316 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.

இந்த முகாமில் உதவி கலெக்டர்கள் புண்ணியகோட்டி, வெங்கட்ராமன், மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, உதவி இயக்குனர் (நில அளவை) ராஜேந்திர பிரசாத் சின்ஹா உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story