அந்தியூர் அருகே, குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்தியூர்,
அந்தியூரை அடுத்த பட்லூர் அருகே உள்ளது அண்ணாநகர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று காலை 7.30 மணி அளவில் காலிக்குடங்களுடன் அந்தியூர்-வெள்ளித்திருப்பூர் ரோட்டில் உள்ள பொம்மன்பட்டி என்ற இடத்தில் ஒன்று திரண்டார்கள்.
பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி உடனே அந்தியூர் போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் மற்றும் அம்மாபேட்டை கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘காவிரி ஆற்று தண்ணீரை சுத்திகரித்து எங்கள் பகுதியில் தெருக்குழாய் மூலம் தினமும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. பற்றாக்குறையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 7 நாட்களாக அண்ணாநகர் பகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்து சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமப்படுகிறோம். அருகே உள்ள தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து அதை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சீராக வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘ஆழ்துளை கிணறு அமைத்து விரைவில் உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்தியூர்-வெள்ளித்திருப்பூர் ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story