மும்மொழி கொள்கையை கைவிடக்கோரி ஈரோட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மும்மொழி கொள்கையை கைவிடக்கோரி ஈரோட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டணியின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜான்ஷா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமசாமி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய கல்விக்கொள்கையில் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வகையில் சுமார் 10 பள்ளிக்கூடங்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கூடமாக செயல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு தகுதித்தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும். பிளஸ்-2 முடித்தாலும் தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரியில் சேர முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும். மும்மொழி கல்வி கொள்கையை கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிப்பதை கைவிட வேண்டும். தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே நீடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஈரோடு ரெயில்வேகாலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கூட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சிவக்குமார், நகர பொருளாளர் மணிவேல், நகர தலைவர் மூஷாராஜா ஜூனைதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட பொருளாளர் தமிழ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் விக்டர் செல்வகுமார், வட்டார பொருளாளர் மோகன்ராஜ் உள்பட ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story