விநாயகர் சிலைகளை வாய்க்கால்களில் கரைக்கக்கூடாது - கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள்


விநாயகர் சிலைகளை வாய்க்கால்களில் கரைக்கக்கூடாது - கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:00 AM IST (Updated: 30 Aug 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலைகளை வாய்க்கால்களில் கரைக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்து ள்ளார்.

ஈரோடு, 

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 2-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழா குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவில் விநாயகர் சிலைகள் வைக்க திட்டமிட்டு உள்ளவர்கள் அதற்கான இட அனுமதி, ஒலி பெருக்கி வைப்பதற்கான அனுமதி போன்றவற்றை அதிகாரிகளிடமும், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளின் தடையின்மை சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு தமிழக அரசால் வழங்கப்படும் பரிந்துரை படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தை தணிக்கை செய்து சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்வார்கள். அவர்கள் பரிசீலனை செய்து சிலை வைப்பதற்கான அனுமதியை வழங்குவார்கள்.

விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பற்ற பொருட்களை வைத்து தயாரிக்கவோ, தடை செய்யப்பட்ட வர்ணங்களை உபயோகப்படுத்தவோ கூடாது. களிமண் மற்றும் இயற்கை வர்ண பொருட்களால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மேலும், சிலைகளை அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கரைக்க வேண்டும். விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் வாய்க்கால்களில் சிலைகளை கரைக்கக்கூடாது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் உரிய அனுமதியின்றி விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டாலும், வாய்க்கால்களில் சிலைகள் கரைக்கப்பட்டாலும் சிலையின் உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விநாயகர் சிலை அமைக்கப்படும்போது மேற்கூரைகள் தகடுகளாலும், போதிய அளவு தண்ணீரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்க வேண்டும். விழாவில் பட்டாசு வெடிக்கக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக் குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story