ஈரோடு அருகே, பண்ணைக்குள் புகுந்து கோழிகளை விழுங்கிய நாகப்பாம்பு பிடிபட்டது
ஈரோடு அருகே பண்ணைக்குள் புகுந்து கோழிகளை விழுங்கிய நாகப்பாம்பு பிடிபட்டது.
ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள பெரிய சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நாட்டு கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
இந்த பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக பண்ணையில் இரவு நேரத்தில் சில கோழிகள் காணாமல் போனது.
இதனால் குணசேகரன், கோழிகளை யார் திருடிச்சென்று இருப்பார்கள் என்பதை கண்காணிப்பதற்காக இரவில் காவல் இருந்தார். எனினும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் காவலில் இருந்தபோது, கோழிப்பண்ணைக்குள் 6 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.
பின்னர் அந்த பாம்பு கோழிப்பண்ணைக்குள் கிடந்த சில முட்டைகளை விழுங்கியது. மேலும் அந்த பாம்பு ஒரு கோழியை வாயில் கவ்வியபோது குணசேகரன் கூச்சலிட்டார். உடனே அந்த பாம்பு கோழியை விட்டுவிட்டு பண்ணைக்குள் ஒரு பகுதியில் மறைந்து கொண்டது. இவ்வளவு நாளாக பண்ணையில் காணாமல் போன கோழிகளை இந்த பாம்பு தான் விழுங்கி இருக்கிறது என்பது அவருக்கு தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி பாம்புபிடி வீரர் யுவராஜூக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் விரைந்து பண்ணைக்கு வந்தார். மறைந்திருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்து இழுத்து வெளியே போட்டார். அப்போது அந்த பாம்பு படமெடுத்து ஆடியது. இதனை அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர். பின்னர் அதைப்பிடித்து ஒரு சாக்குப்பையில் போட்டார். இதையடுத்து அந்த பாம்பு சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.
Related Tags :
Next Story