கிராமங்களில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள கழிவறைகளை பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு - மந்திரி ஈசுவரப்பா பேட்டி


கிராமங்களில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள கழிவறைகளை பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு - மந்திரி ஈசுவரப்பா பேட்டி
x
தினத்தந்தி 30 Aug 2019 4:00 AM IST (Updated: 30 Aug 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள கழிவறைகளை பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

பெங்களூரு,

கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனது துறைக்கு உட்பட்ட உயர் அதிகாரிகளுடன் வருகிற 8, 9-ந் தேதிகளில் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளேன். இதில் கிராம வளர்ச்சி குறித்தும், அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. ஏற்கனவே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையில் கடந்த வாரம் ரூ.500 கோடியை வழங்கியுள்ளது. இன்னும் ரூ.1,000 கோடி நிலுவையில் உள்ளது. அந்த தொகையையும் படிப்படியாக கேட்டு பெறுவோம்.

கிராமங்களில் 25 ஆயிரம் ஏரிகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் வீடுகளில் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை கிராம மக்கள் சரியாக பயன்படுத்துவது இல்லை என்று அரசின் கவனத்திற்கு தகவல் வந்துள்ளது.

கழிவறைகளை பயன்படுத்த வேண்டும் என்பதின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இன்னும் 2 லட்சம் கழிவறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. அந்த பணிகளை நிறைவு செய்வோம். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அவசர தேவைக்கு மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.1 லட்சமும், முழுமையாக இடிந்து விழுந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வசதியாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படும். அந்த பகுதிகளில் நிவாரண பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனது துறையில் அரசு அதிகாரிகள் நன்றாக வேலை செய்கிறார்கள். வெள்ளத்தின்போது, அரசு அதிகாரிகள் தூங்காமல் வேலை பார்த்தனர்.

வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் கிராமங்களில் வசித்து வரும் மக்களை இடம் மாற்றுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். நிவாரண உதவி பெற ஆவணங்கள் வேண்டும். ஆவணங்கள் தொலைந்திருந்தால், அத்தகையவர்களின் ஆவணங்கள், அரசு துறைகளில் இருந்து பெறப்படும். முறைகேடுகளை தடுக்க வேண்டுமென்றால், ஆவணம் கண்டிப்பாக வேண்டும்.

‘ஜலதாரே‘ திட்டத்தின் நிதி ஆதாரங்கள் மூலம் நீரை எடுத்து, கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சோதனை அடிப்படையில் மண்டியா, ராய்ச்சூர், விஜயாப்புரா, கோலார் ஆகிய 4 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

Next Story