போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள மானம்பாக்கி, வேலூர், அதிகரை உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது. இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மானாமதுரை- சிவகங்கை ரோட்டில் காட்டூரணி விலக்கு என்ற இடத்தில் இறங்கி 3 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலரும் தினமும் இவ்வாறு சென்று வருகின்றனர்.
சமீப காலமாக இந்த பாதையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பலரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கடந்த 25-ந் தேதி வள்ளி (வயது 50) என்ற பெண் பஸ்சில் இருந்து இறங்கி மானம்பாக்கி கிராமத்திற்கு நடந்து சென்றார்.
அப்போது மோட்டார்சைக்கிள்களில் வந்த நான்கு மர்மநபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்ததுடன் கடுமையாக தாக்கி காட்டுப்பகுதிக்குள் வீசி சென்று விட்டனர்.
2 நாட்கள் கழித்து கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் வழிப்பறி சம்பவங்களால் மானம்பாக்கி, வேலூர், அதிகரை கிராமமக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்தும், அங்கு எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், பெண்ணிடம் நகை பறித்து அவரை தாக்கி காட்டுப்பகுதிக்குள் வீசி சென்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மறியல் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி மானா மதுரை-சிவகங்கை சாலையில் காட்டூரணி விலக்கு என்ற இடத்தில் மானம்பாக்கி, வேலூர், அதிகரை ஆகிய கிராம மக்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் மானாமதுரை-சிவகங்கை சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story