காரைக்குடி அருகே, அதிசயமாக வளர்ந்த கற்றாழை பூவை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்
காரைக்குடி அருகே அதிசயமாக வளர்ந்த கற்றாழை பூவை மர்ம கும்பல் வெட்டி சென்று விட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் பகுதி வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கற்றாழை இனத்தை சேர்ந்த செடியில் சுமார் 25 அடி உயரத்தில் பாம்பின் வடிவம் போன்று, அதன் பூ தண்டுடன் வளர்ந்து காணப்பட்டது. இது குறித்து முதன் முதலில் தினத்தந்தியில் படத்துடன் செய்தி பிரசுரமாகியது.
அதன் பின்னர் இதை பார்ப்பதற்காக இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்களும் இங்கு வந்து இந்த அதிசய கற்றாழையை பார்த்து செல்கின்றனர். மேலும் இந்த அதிசய கற்றாலை பூவை தெய்வத்தின் அற்புதம் என்று வணங்கி, பூவுக்கு மாலை அணிவித்து வணங்கினர். நாளுக்கு நாள் இதனை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் இங்கு வந்து சென்றனர்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கற்றாழையை பார்வையிட வந்த பெண் ஒருவர் திடீரென சாமியாடி, இது நாகத்தம்மன் குடியிருக்கும் இடம் என்றும், இங்கு விரைவில் கோவில் கட்ட வேண்டும் என்றும் அருள் வாக்கு கூறினார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் விரைவில் கோவில் கட்டுவோம் என்று கூறினர்.
இந்தநிலையில் நன்கு வளர்ந்து நின்ற பாம்பு வடிவமைப்பு கொண்ட கற்றாழை பூ மற்றும் தண்டு பகுதியை மர்ம நபர்கள் வெட்டி சென்றுள்ளனர். இதனால் காலை வழக்கம் போல் அதிசய கற்றாலையை காண சென்ற பொது மக்கள் கற்றாலை வெட்டப்பட்டதை கண்டு வேதனையுடன் திரும்பி சென்றனர். மேலும் இதே போல் மறுபடியும் இந்த கற்றாழை பூ வளர சுமார் 25 ஆண்டுகள் வரை ஆகும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story