ராமேசுவரம் கடலோர பகுதியில் நிழல் இல்லாத நாள்


ராமேசுவரம் கடலோர பகுதியில் நிழல் இல்லாத நாள்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:00 AM IST (Updated: 30 Aug 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கடலோர பகுதியில் நேற்று நிழல் இல்லாத நாள் காணப்பட்டது.

ராமேசுவரம்,

வருடத்தில் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சூரியன் நம் தலைக்கு மேல் இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நமது காலடியில் இருக்கும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு தெரியாது. இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சூரியன் செங்குத்தாக இருக்கும்போது நிழல் பூஜ்ஜியமாக மாறும் நாளினை நிழல் இல்லாத நாள் என்று கூறுவர். அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிழல் இல்லாத நாளாக இது நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் இது நிகழும். சூரியனின் வட நகர்வு நாள்களில் ஒரு நாளும், தென் நகர்வு நாட்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும்.

இதன்படி நேற்று ராமேசுவரம் கடலோர பகுதிகளில் நிழல் இல்லாத நாள் தோன்றியது. சரியாக நண்பகல் 12.14 மணிக்கு சூரியன் நடு உச்சத்தில் இருக்கும் போது நிழல் இல்லாத நேரம் தென்பட்டது. இதனை புதுரோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோதிவேல், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெரோம், அறிவியல் ஆசிரியர் ஜலீலா ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.

இந்த நிகழ்வு எங்கெங்கு எப்போது ஏற்படும் என்பதை இணையதளத்தின் மூலம் அறியலாம். நண்பகல் என்றால் பெரும்பாலும் 12 மணியை தான் கூறுகிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் 12 மணிக்கு சூரியன் செங்குத்தாக இருப்பதில்லை. நமது இந்திய திட்ட நேரம் கிரீன்வீச் நேரத்தை விட 5.30 மணி நேரம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அலகாபாத்தில் மட்டுமே 12 மணிக்கு சூரியன் செங்குத்தாக அமையும். அந்தமான் தீவுகள் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் 12 மணிக்கு முன்னரே சூரியன் செங்குத்தாக தோன்றும். தமிழகம், கேரளா போன்ற இடங்களில் 12 மணிக்கு பின்னரே சூரியன் செங்குத்தாக தோன்றுகிறது. 

Next Story