தண்டவாள கொக்கிகள் திருட்டு: ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை


தண்டவாள கொக்கிகள் திருட்டு: ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
x
தினத்தந்தி 30 Aug 2019 4:15 AM IST (Updated: 30 Aug 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் கொக்கிகள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் நேரில் விசாரணை நடத்தினார்.

ஆத்தூர், 

கடந்த 27-ந் தேதி இரவு, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை கிராமத்தையொட்டி உள்ள ரெயில் தண்டவாளத்தில் இருந்த கொக்கிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதையடுத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் நேற்று ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை கிராமத்துக்கு வந்தார். அங்கு கொக்கிகள் பெயர்த்து எடுக்கப்பட்ட ரெயில் தண்டவாள பகுதியை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

அப்போது இரவு நேரங்களில் ரெயில் தண்டவாளம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடவும், ரெயில் தண்டவாள பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தவும், தண்டவாளத்தில் கொக்கிகளை திருடிய மர்ம நபர்களை உடனடியாக பிடிக்கவும் ரெயில்வே போலீசாருக்கு சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவிட்டார்.

இந்த விசாரணையின் போது, ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பழனிசாமி மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் கூறும் போது, ‘ரெயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து மது குடிக்கும் சிலர் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு நாட்களுக்குள் ரெயில் தண்டவாள கொக்கிகளை திருடிய நபர்களை கைது செய்வோம்’ என்றார்கள்.

Next Story