பட்ஜெட்டில் பழைய திட்டங்களே உள்ளன மக்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் இல்லை சிவா எம்.எல்.ஏ. புகார்


பட்ஜெட்டில் பழைய திட்டங்களே உள்ளன மக்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் இல்லை சிவா எம்.எல்.ஏ. புகார்
x
தினத்தந்தி 30 Aug 2019 5:04 AM IST (Updated: 30 Aug 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட்டில் பழைய திட்டங்களே உள்ளன. மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து எதுவும் இல்லை என்று சிவா எம்.எல்.ஏ. புகார் தெரிவித்தார்.

புதுச்சேரி,

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் பேசியதாவது:-

சிவா(தி.மு.க.): கவர்னர் உரையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து தான் உள்ளது. மாநில வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட உள்ள திட்டங்கள் எதுவும் இல்லை. புதுவை மாநிலத்தின் மீது உள்ள கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக எதுவும் இல்லை. மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள கவர்னர் கிரண்பெடி மத்திய அரசுடன் பேசி கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய சம்பளத்தை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் புதுவைக்கு வழங்குவது இல்லை. இதனை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவர்னர் கிரண்பெடி ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆனால் பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ரோடியர் மில், சுதேசி, பாரதி மில்களை சென்று பார்ப்பது இல்லை. இதனை மீண்டும் திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் அது செயல்படுத்தப்படவில்லை. எனவே புதுவையில் அதனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலம் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. உப்பனாறு கழிவுநீர் வாய்க்காலின் மீது அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. சாலையுடன் இணைக்கும் பணி மட்டும் தான் நடைபெற வேண்டும். அதனை உடனடியாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். புதுவைக்கு குடிநீர் குழாய் அமைத்து ஊசுடு ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் என்ன நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.

வரிபாக்கி வைத்துள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் மதுபான கடை உரிமையாளர்கள் அதனை செலுத்த முன்வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் சிலர் அதனை கட்ட விடாமல் தடுக்கின்றனர். இதில் அரசு நடவடிக்கை எடுத்து வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story