அமைச்சரவையின் முடிவினை செயல்படுத்த முட்டுக்கட்டையை தகர்த்தெறிய வேண்டிய பொறுப்பு உள்ளது - நாராயணசாமி விளக்கம்


அமைச்சரவையின் முடிவினை செயல்படுத்த முட்டுக்கட்டையை தகர்த்தெறிய வேண்டிய பொறுப்பு உள்ளது - நாராயணசாமி விளக்கம்
x
தினத்தந்தி 30 Aug 2019 5:08 AM IST (Updated: 30 Aug 2019 5:08 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சரவையின் முடிவினை அதிகாரிகள் செயல்படுத்த முட்டுக்கட்டை இருக்கும்போது அதை தகர்த்தெறிய வேண்டிய பொறுப்பு உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கவர்னர் உரை என்பது கடந்த காலங்களில் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் வளர்ச்சியை சுட்டிக்காட்டுவதுதான். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையிலும் 94 சதவீதம் நிதியை செலவு செய்துள்ளோம். கடந்த காலங்களில் வாங்கிய கடன்தொகை ரூ.355 கோடியை திருப்பி செலுத்தி உள்ளோம். அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவற்றுக்கே செலவு செய்துள்ளோம்.

மத்திய அரசு ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு 10 சதவீத நிதியை மானியமாக அதிகரித்து தருகிறது. ஆனால் புதுச்சேரிக்கு 5 சதவீதம்தான் உயர்த்தி தருகிறது. மத்திய அரசு மூலம் வசூலிக்கப்படும் வரியில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு பிரித்து தரப்படுகிறது. ஆனால் புதுச்சேரிக்கு 26 சதவீதம்தான் வழங்கப்படுகிறது. ஏனெனில் நாம் மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. இதனால் புதுவை மாநிலத்துக்கு ரூ.1,500 கோடிதான் கிடைக்கிறது. ஆனால் நாம் மாநிலமாக இருந்தால் ரூ.2,500 கோடி கிடைக்கும்.

இப்போது நமக்கு அதற்கு சாதகமான நிலை வருகிறது. ஏனெனில் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீருக்கு மத்திய நிதிக்குழுவில் இடம் கொடுக்கப்படுகிறது. அதேபோல் புதுவையையும் சேர்க்க நிதிக்குழு தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். வைத்திலிங்கம் எம்.பி. நாடாளுமன்றத்தில் மாநில அந்தஸ்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு தற்போதைய நிலையே தொடரும் என்று மத்திய மந்திரி பதில் கூறியுள்ளார். தொடர்ந்து நாம் மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.

புதுவை மாநிலத்தின் கடன் உள்நாட்டு உற்பத்தியில் 24.4 சதவீதமாக இருந்தது. அதை 22.4 சதவீதமாக குறைத்துள்ளோம். இதை சுட்டிக்காட்டி நமது நிதி நிலை நன்றாக இருப்பதாக கூறி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்துக்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. எங்களால் முடிந்தவரை புதுவை மாநிலத்தின் நிதிநிலையை பெருக்கி உள்ளோம்.

இருந்தாலும் இலவச அரிசி போட தடை, பஞ்சாலை தொழிலாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில் பிரச்சினை உள்ளது. முதல்-அமைச்சருக்கான நிதி கையாளும் அதிகாரத்தை ரூ.10 கோடியில் இருந்து ரூ.50 கோடியாகவும், கவர்னருக்கு ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாகவும் உயர்த்த மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்தது. ஆனால் இன்னும் அரசிதழில் வெளியிடப்படவில்லை.

லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு பிறகு 90 சதவீத கோப்புகள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்படுவதில்லை. அமைச்சரவையின் முடிவினை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நமக்கு உள்ளது. இருந்தபோதிலும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவினை அதிகாரிகள் செயல்படுத்தும் முன்பு கவர்னருக்கு அனுப்பவேண்டும் என்று கூறி உள்ளனர். அதற்கு கோர்ட்டு தீர்ப்பினை சுட்டிக்காட்டி 3 பக்கத்துக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளேன்.

தற்போது இலவச அரிசி போடுவதற்கான ரூ.160 கோடிக்கான கோப்பு தேங்கி உள்ளது. அமைச்சரவையின் முடிவினை அதிகாரிகள் நிறைவேற்ற முட்டுக்கட்டை இருக்கும்போது அதை தகர்த்தெறிய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஐகோர்ட்டு தனது தீர்ப்பில் அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் முதியோர், விதவை உதவித்தொகைகளை மாதாமாதம் முறையாக வழங்கி வருகிறோம். பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு நிதியாதாரம் இருந்தும் சம்பளம் போடமுடியவில்லை. அதற்கும் தடை போடுகிறார்கள். ஊசுடு ஏரி நீரை நகரப்பகுதி மக்களுக்கு குடிநீராக வழங்கவும் கோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளனர். ஆசிரியர், காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Next Story