கொள்முதல் விலையும் அதிகரிப்பு: புதுவையில் இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - சட்டசபையில் நாராயணசாமி அறிவிப்பு


கொள்முதல் விலையும் அதிகரிப்பு: புதுவையில் இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - சட்டசபையில் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 5:29 AM IST (Updated: 30 Aug 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயருகிறது. கொள்முதல் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இது அமலுக்கு வருவதாக சட்டசபையில் முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவையில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஏனெனில் பால் கொள்முதல் விலை கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை உயர்த்தப்படவில்லை.

இந்த 5 ஆண்டுகளில் மாட்டுத்தீவனம், பசுந்தீவனம், உலர்தீவனம், தவிடு, புண்ணாக்கு விலைகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. எனவே புதுவையில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், கறவைமாடுகள் வைத்து பால் உற்பத்தி தொழிலில் லாபம் அடைவதற்காகவும் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

நமது பக்கத்து மாநிலமான தமிழ்நாடு ஆவின் நிறுவனம் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.28-ல் இருந்து ரூ.32 ஆக உயர்த்தி உள்ளது. அதுபோல் புதுவையில் கூட்டுறவு பால் சங்கங்களுக்கு வழங்கும் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.34 ஆக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தி வழங்கப்படும்.

இந்த விலை உயர்வு ஆவின் கொள்முதல் விலையைவிட புதுவை பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடுதலாக வழங்கப்படும். இதன்மூலம் 100 கூட்டுறவு பால் சங்கங்களை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

புதுவையில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று நுகர்வோருக்கு தரமான பால் தொடர்ந்து வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் பண்ணையின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வேண்டியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலக செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதாலும், பாண்லேயின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்) ரூ.36-ல் இருந்து ரூ.42 ஆகவும், சிறப்பு சமன்படுத்திய பால் (பச்சை நிற பாக்கெட்) ரூ.38-ல் இருந்த ரூ.44 ஆகவும், நிலைப்படுத்திய பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்) ரூ.42-ல் இருந்து ரூ.48 என விலை உயர்த்தி விற்பனை செய்யப்படும்.

இந்த விலை உயர்வு அனைத்து வகையான பாலுக்கும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இன்று (வெள்ளிக் கிழமை) முதல் உடனடியாக அமலுக்கு வரும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story