திருப்போரூர் அருகே சிக்கிய வெடிகுண்டை ஏரியில் வெடிக்க செய்தனர்


திருப்போரூர் அருகே சிக்கிய வெடிகுண்டை ஏரியில் வெடிக்க செய்தனர்
x
தினத்தந்தி 31 Aug 2019 4:15 AM IST (Updated: 31 Aug 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே மானாமதியில் சிக்கிய வெடிகுண்டை வெடிகுண்டு நிபுணர்கள் மானாமதி ஏரியில் வெடிக்க வைத்தனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கங்கையம்மன் கோவில் குளம் அருகே கடந்த 23-ந்தேதி வெடிகுண்டு வெடித்ததில் கூவத்தூர் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 22), மானாமதி பகுதியை சேர்ந்த திலீபன் (25) ஆகியோர் உயிரிழந்தனர். அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (25), திருமால் (22), செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெயராம் (28), மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசுவநாதன் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். அந்த பகுதியில் இருந்து மற்றொரு வெடிகுண்டும் கண்டெடுக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை மானாமதி ஏரியில் ஆழமாக குழி தோண்டி வைத்து செயல் இழக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரே செயல் இழக்க வைக்க வேண்டும் என்பதால் அது பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டு காயார் அருகே முருகமங்கலம் தனியார் குடோனில் வைக்கப்பட்டிருந்தது.

கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் நேற்று அந்த வெடிகுண்டை வெடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சென்னை மற்றும் காஞ்சீபுரம் வெடிகுண்டு நிபுணர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மானாமதி ஏரியில் பள்ளம் தோண்டி அதில் மணல் மூட்டைகளை அடுக்கி வெடிகுண்டை வெடிக்க செய்தனர் அதில் ஒரு பகுதி மட்டும் வெடித்தது. பின்னர் மீண்டும் அந்த வெடிகுண்டின் மற்றொரு பகுதியை வெடிக்க வைத்தனர். வெடிகுண்டு பயங்கர சாதத்துடன் வெடித்தது. அப்போது புகைமூட்டத்துடன் காணப்பட்டது.

வெடித்த துகள்களை வெடிகுண்டு நிபுணர்கள் செங்கல்பட்டு கோர்ட்டில் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story