நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்காவிட்டால் போராட்டம் - சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் பேட்டி
நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் சாலை ஆய்வாளர் சங்கத்தின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 7-வது கோட்ட பேரவை கூட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் சேகர், இணை செயலாளர் சையது முகமது உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு கிரேடு அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அதையடுத்து மாநில தலைவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 6 மாவட்டங்களுக்கான சாலை பராமரிப்பு பணிக்கான உரிமத்தை தனியார் நிறுவனத்துக்கு அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.2 ஆயிரத்து 800 கோடி வரை அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையில் வேலை அளித்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் ரூ.800 கோடி தான் செலவாகும்.
அரசுக்கும் ரூ.2 ஆயிரம் கோடி மிச்சம். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் சாலை பராமரிப்பு பணியை தனியார் வசம் அரசு ஒப்படைத்து உள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே சாலை பராமரிப்பை அரசே ஏற்க வேண்டும். இல்லையென்றால் சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் இணைந்து விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story