தேனியில், சிறுசேமிப்பு நிறுவனம் நடத்தி ரூ.2 லட்சம் மோசடி - பெண் கைது; கணவருக்கு வலைவீச்சு


தேனியில், சிறுசேமிப்பு நிறுவனம் நடத்தி ரூ.2 லட்சம் மோசடி - பெண் கைது; கணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Aug 2019 4:00 AM IST (Updated: 31 Aug 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் சிறுசேமிப்பு நிறுவனம் நடத்தி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடைய கணவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கண்ணன் (வயது 40). இவருடைய மனைவி அங்காளஈஸ்வரி (36). இவர்கள் இருவரும், அதே பகுதியில் சிறுசேமிப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனம் அரசால் பதிவு பெற்றது என்றும் கூறிவந்தனர்.

இந்த நிறுவனத்தில் தொடர்ந்து பணம் செலுத்தினால், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வட்டியுடன் பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கூறி வந்தனர். இதனை நம்பி, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி மனைவி கஸ்தூரி என்பவர் இந்த நிறுவனத்தில் 4 சீட்டுகள் கட்டி வந்தார். 18 மாதங்கள் பணம் செலுத்தினார். அந்த வகையில் அவர், ரூ.2 லட்சம் செலுத்தினார். ஆனால், அவர்கள் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

கஸ்தூரி தனக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பிக் கேட்டு, அங்காளஈஸ்வரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரும், அவருடைய கணவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அவர் புகார் செய்தார்.

அதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி விசாரணை நடத்தி, அங்காளஈஸ்வரி, கண்ணன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். இதில் அங்காளஈஸ்வரியை போலீசார் கைது செய்தனர். கண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த நிறுவனத்தில் யாரேனும் ஏமாற்றப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story