போலீஸ் விசாரணை முடிந்தது, மாவோயிஸ்டு டேனிஸ் ஊட்டி கோர்ட்டில் மீண்டும் ஆஜர்
போலீஸ் விசாரணை முடிந்து ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிஸ் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஊட்டி,
கேரள மாநிலம் அகழி என்ற பகுதியில் மாவோயிஸ்டு இயக்கத்துக்கு ஆதரவாக பழங்குடியின மக்களிடம் பேசியதாக கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த டேனிஸ் என்ற கிருஷ்ணாவை(வயது 31) கேரள போலீசார் கைது செய்து திருச்சூர் சிறையில் அடைத்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கொம்பை கிராமத்தில் மாவோயிஸ்டுகள் புகுந்து அரசுக்கு எதிராகவும், மாவோயிஸ்டு இயக்கத்துக்கு ஆதரவாகவும் போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொலக்கொம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இந்த வழக்கில் டேனிசுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறும் கொலக்கொம்பை போலீசார் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் வாரண்டு பெறப்பட்டு கேரள போலீசாருக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் இருந்து டேனிசை அம்மாநில போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஊட்டி கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
மேலும் டேனிசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிவில், ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மற்றும் கியூ பிரிவு போலீசார் டேனிசிடம் விசாரணை நடத்தினர். மேலும் நெடுகல்கொம்பை பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஊட்டி கோர்ட்டில் டேனிசை மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது டேனிசிடம், 'போலீசார் தொந்தரவு செய்தார்களா?, உணவு வழங்கப்பட்டதா?, தங்குவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டதா?' என்று நீதிபதி வடமலை கேட்டார். அதற்கு அவர். 'சரியாக வசதிகளை செய்து இருந்தனர்' என்று தெரிவித்தார்.
பின்னர் டேனிஸ் நீதிபதியிடம், 'திரும்ப, திரும்ப போலீசார் ஒரே கேள்வியை என்னிடம் கேட்டனர். நான் எந்தவித ஒப்புதல் வாக்குமூலமும் கொடுக்கவில்லை. எந்த இடத்தையும், யாரையும் அடையாளம் காட்டவில்லை. என் சார்பில் வக்கீல் விஜயன் ஆஜராகுவார்' என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. டேனிஸ் சிறையில் படிப்பதற்கு புத்தகம் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பு வக்கீல் தெரிவித்தார். அதற்கு அரசு வக்கீல் பாலநந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக சிறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கலாம் என்று நீதிபதி கூறினார்.
போலீசார் டேனிசை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வெளியே அழைத்து வந்தபோது, 'ஜிந்தாபாத், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுகிறார்கள், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும், காஷ்மீரில் மத்திய அரசு செயல்பட்டது சரியில்லை' என்று கையை உயர்த்தி அவர் கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story