தூனேரி அரசு பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு பால் வழங்கும் திட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


தூனேரி அரசு பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு பால் வழங்கும் திட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 Aug 2019 4:00 AM IST (Updated: 31 Aug 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

தூனேரி அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பால் வழங்கும் திட்டத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

ஊட்டி அருகே உள்ள தூனேரி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பால் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு பால் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா ஒரு பெரிய உணவு உற்பத்தியாளராக இருந்தாலும், உலகத்தில் சுமார் 196 மில்லியன் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் மதிப்பிடப்பட்டப்படி உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்கள் 24 சதவீதம் பேர் ஆகும். பால் அல்லது பாலை கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை புரதம் மற்றும் ஒரு குழந்தைக்கு தேவையான பல மைக்ரோ ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எனவே வழக்கமான உணவில் பால் சேர்ப்பது ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் 30 சதவீத குழந்தைகள் எடை குறைவாகவும், 53.3 சதவீதம் குழந்தைகள் ரத்த சோகை கொண்டதாகவும் உள்ளன. ஆகவே இன்று (நேற்று) முதல் 1200 மாணவ-மாணவிகளை கொண்ட 4 அரசு பள்ளிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உடன் சுவை கொண்ட 200 மில்லி லிட்டர் பால் அனைத்து வேலை நாட்களிலும் மலபார் பால் ஒன்றியம் மூலம் வழங்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் நான் கலெக்டராக பொறுப்பேற்ற உடன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்றேன். அப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதை நேரடியாக அறிந்தேன். உடனே நீலகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள், அமைப்புகளிடம் உதவுவதற்கு உதவி கேட்டேன். ஆனால் உதவிகள் கிடைக்கவில்லை. மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் உதவ முன்வந்தது. குழந்தைகளுக்கு ஒரு வயதில் இருந்து 5 வயதுக்குள் ஊட்டச்சத்து கிடைக்கவில்லையென்றால், அறிவு வளர்ச்சி பாதிக்கும்.

நீலகிரியில் 582 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கப்பட்டு, அவர்கள் வளர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் தேசிய அளவில் நீலகிரி மாவட்டத்துக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 18 பள்ளிகளில் மேற்கண்ட திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், இது 32 பள்ளிகளாக உயர்த்தப்படும். இதனை செயல்படுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பலரின் உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பால் வழங்குவது அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், சுகாதாரமான நடைமுறைகளுக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார். இதில் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ஆனந்த்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story