இந்தியாவில் எந்த மாநில உரிமை பறிக்கப்பட்டாலும் தி.மு.க. குரல் கொடுக்கும் - திருச்சி சிவா எம்.பி. பேட்டி
இந்தியாவில் எந்த மாநில உரிமை பறிக்கப்பட்டாலும் தி.மு.க. குரல் கொடுக்கும் என்று திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
கன்னியாகுமரி,
திருச்சி சிவா எம்.பி. நேற்று மதியம் கன்னியாகுமரி வந்தார் அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
தி.மு.க.வின் தலையாய கொள்கை மாநில சுயாட்சி. இந்தியாவில் எந்த மாநிலத்தின் உரிமை பறிக்கப்பட்டாலும், அதற்காக குரல் எழுப்பும் இயக்கம் தி.மு.க. பாராளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கொண்டு வந்த திருத்தத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது. ஆதரித்து இருந்தால் எங்களுக்கு வாக்கு அதிகமாக கிடைத்திருக்கும்.
மாநில உரிமைகளை பறிக்கும் விவகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பும் பொறுப்புள்ள எதிர்கட்சியாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது. உலகளவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் தமிழகம் அல்ல. இதனால், தமிழகத்தில் தொழில் செய்ய தொழில் அதிபர்கள் அஞ்சுகிறார்கள். இங்குள்ள சம்பிரதாயத்தை கடைப்பிடிக்க முடியாமல் வெளிமாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர்.
தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல லட்சம் கோடிக்கு முதலீடுகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலை என்ன என்பது தெரியவில்லை. முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் அவர் என்ன கொண்டு வருகிறார் என்பதை பொறுத்தே பதிலளிக்க முடியும். பட்ஜெட்டில் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசு எதிர்பார்த்த ரூ.1¼ லட்சம் கோடி வருவாய் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தை வெளியிடாமல் பல்வேறு விஷயங்களில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்ற வகையில், மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதேபோன்று நாடு முழுவதும் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் பல லட்ச ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை மத்திய அரசின் உதவியுடன் தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் முயற்சி. நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், செல்போன் சார்ஜர் போன்ற பொருட்களின் மீதான ஆயத்தீர்வை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களுக்கு தெரியவில்லை. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மீது எடுத்த நடவடிக்கையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கன்னியாகுமரி வந்த திருச்சி சிவா எம்.பி.யை குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அகஸ்தீஸ்வரம் தெற்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி, கன்னியாகுமரி நகர செயலாளர் ஸ்டீபன் உள்பட பலர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story