பொள்ளாச்சியில் பயங்கரம், இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை - காணவில்லை என நாடகமாடிய கணவர் கைது
பொள்ளாச்சியில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, காணவில்லை என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). தோட்டங்களுக்கு மருந்து அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (25). இவர்களுக்கு அபிராமி (7) என்ற மகள் உள்ளார். அங்கு உள்ள அரசு பள்ளியில் அபிராமி 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி முதல் கவுசல்யா காணவில்லை. இதுதொடர்பாக பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் கடந்த 7-ந்தேதி மனைவியை காணவில்லை என்று சக்திவேல் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா ஆகியோரது தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கணவர் சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மனைவிக்கு சிலருடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சக்திவேல் கொடுத்த பெயர் விவரங்களை வாங்கி, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
மேலும் அவரது மனைவியின் செல்போன் சிம்கார்டு சக்திவேலிடம் இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்ததில் சிம்கார்டை கழற்றி வைத்து விட்டு, செல்போனை எடுத்து சென்று விட்டதாக தெரிவித்தார். இதற்கிடையில் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சக்திவேல் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சக்திவேலிடம் துருவி, துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மேலும் உடலை ஒரு சாக்குபையில் கட்டி ஆர்.பொன்னாபுரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் அவரை அழைத்து சென்றனர். அங்கு போலீசாருக்கு அவர் கிணற்றை அடையாளம் காட்டினார். மரங்கள், புதர்கள் சூழ்ந்து இருந்ததால் கிணறு இருப்பதே தெரியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றை சுற்றி இருந்த மரக்கிளைகளை அரிவாளால் வெட்டி அகற்றினர்.
சுமார் 80 அடி ஆழ கிணற்றில் 60 அடிக்கு தண்ணீர் இருந்தது. மேலும் கவுசல்யாவின் உடல் சாக்கு பையில் மூட்டை கட்டப்பட்ட நிலையில் மிதந்து கொண்டிருந்தது. பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஒரு கட்டிலில் கயிற்றை கட்டி நாலாபுறமும் நின்று பிடித்து கொண்டனர். மெதுவாக கிணற்றில் கட்டிலை இறக்கி, லாவகமாக மூட்டை மேலே தூக்கி கவுசல்யாவின் உடலை மீட்டனர். கொலை செய்து ஒரு மாத காலம் ஆவதால் கடுமையான துர்நாற்றம் வீசியது. கவுசல்யாவின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
துணை சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் வித்யா ஆகியோர் முன்னிலையில் மூட்டையில் இருந்த மனைவியின் உடலை, சக்திவேல் அடையாளம் காட்டினார். பின்னர் கொலை செய்தது குறித்தும், உடலை கிணற்றில் வீசியது தொடர்பாக சக்திவேலிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இதையடுத்து கவுசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் மாயம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் சக்திவேலை கைது செய்தனர். மனைவியை கொலை செய்து விட்டு காணவில்லை என கணவர் நாடகமாடிய சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story