தமிழகத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
தமிழகத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கொட்டையூரில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியில் மாணவ- மாணவிகளின் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள் அரசன் வரவேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதியில் இருந்து உருவாகும் கலைஞர்கள் சிறந்த படைப்பாளிகளாக திகழ்கின்றனர். கல்லூரிகளில் அதிக வேலைவ ாய்ப்புகள் தரும் தொழில்நுட்பங்களுடன் கூடிய கல்விமுறையை கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறோம்.
இதுதொடர்பாக அறிஞர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக பல கல்லூரிகளில் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தேசிய தர நிர்ணயத்துக்காக இங்குள்ள நுண்கலை பல்கலைக்கழகம் தரம் உயர்த்தப்படும். உடையாளூரில் அகழாய்வு பணிகளில் மத்திய அரசின் தொல்லியல் துறை தற்போது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் காஞ்சீபுரம் வந்தபோது அவருடன் அகழாய்வு பணிகள் குறித்து ஆலோசனை செய்தோம். அதற்கு மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சரும் உடையாளூர் மிகச்சிறந்த பண்பாட்டு தலமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கீழடியில் அகழாய்வு பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கீழடியில் அகழாய்வு வைப்பகம் அமைக்க 1 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதை மேம்படுத்த மத்திய அரசிடம் ரூ.2 கோடி நிதி உதவி கேட்டு உள்ளோம்.
தமிழ் ஆய்வுக்காக அகில உலக தமிழ் ஆய்வு அமைப்பு உலக தமிழ் மாநாட்டை நடத்தி வருகிறது. 2020-21-ம் ஆண்டில் தமிழகத்தில் உலக தமிழ்மாநாடு நடைபெறுகிறது. சொற்கோவை திட்டம் என்பது தமிழக அரசால் நடத்தப்படும் மிகச்சிறந்த திட்டங்களுள் ஒன்று. இதன்படி புதிய சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை 4 லட்சத்து 10 ஆயிரம் புதிய சொற்களை இந்த அமைப்பு உருவாக்கிஉள்ளது. இந்த புதிய சொற்கள் சொற்கோவை டாட் காம் என்கிற பெயரில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இதற்கான முயற்சியை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருப்பனந்தாளில் அறிவியல் வளர்ச்சி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூரில் ராஜராஜசோழன் அகழாய்வு கூடம், மணிமண்டபம் ஏற்படுத்த மத்திய தொல்லியல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கான முடிவுகள் இந்தாண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தான் அதிகளவில் ஓலைச்சுவடிகளும், கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அதில் இதுவரை 1½ லட்சம் ஓலைச்சுவடிகள் படிவம் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
Related Tags :
Next Story