‘பேஸ்புக்’ காதல் விவகாரம்: நெல்லை டாக்டரின் தாய் மீதும் வழக்கு - சட்டக்கல்லூரி மாணவி புகாரில் நடவடிக்கை
‘பேஸ்புக்‘ காதல் விவகாரத்தில் காதலியை ஏமாற்றியதாக கூறப்படும் டாக்டரின் தாய் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெல்லை,
பாளையங்கோட்டை சீனிவாச நகரை சேர்ந்தவர் மேத்யூ ஜாக்சன் எட்வர்ட் (வயது 28). இவர், எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் ‘பேஸ்புக்‘கில் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தபோது, மதுரை எழில்நகரை சேர்ந்த ஐஸ்வர்யா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஐஸ்வர்யா சென்னையில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. விடுமுறை நாட்களில் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்தனர். ஒரே அறையில் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க ஐஸ்வர்யாவின் உறவினர்கள் பேசினர். ஆனால், ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய மேத்யூ ஜாக்சன் மறுத்து விட்டார். இதுதொடர்பாக மேத்யூ ஜாக்சன் வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா மற்றும் உறவினர்களை, மேத்யூ ஜாக்சனின் தாய் ரீட்டா ரெபேக்கா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த மாதம் ஐஸ்வர்யா நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மேத்யூ ஜாக்சனை வரவழைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரும் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேத்யூ ஜாக்சன் அளித்த புகாரில் ஐஸ்வர்யா உள்பட 7 பேர் சேர்ந்து தன்னை மிரட்டி, செல்போனில் படம் எடுத்து ரூ.3 லட்சத்தை அபகரித்துக் கொண்டதாக கூறி இருந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி, ஐஸ்வர்யா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். டாக்டர் மேத்யூ ஜாக்சன், அவருடைய தாய் ரீட்டா ரெபேக்கா ஆகியோர் மீது ஐஸ்வர்யா புகார் அளித்தார். அதில், மேத்யூ ஜாக்சன் பேஸ்புக் மூலம் பழகி, என்னை காதலித்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உடன் தங்க வைத்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேலும் அவருடைய தாயார் என்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறி இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் டாக்டர் மேத்யூ ஜாக்சன், அவருடைய தாய் ரீட்டா ரெபேக்கா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story