கோவில்பட்டி அருகே, 3-ந்தேதி நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வாபஸ்


கோவில்பட்டி அருகே, 3-ந்தேதி நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 31 Aug 2019 3:15 AM IST (Updated: 31 Aug 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் வருகிற 3-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கோவில்பட்டியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், அலுவலர்கள், விவசாயிகள் தினமும் கோவில்பட்டிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பட்டி, விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளைச் சேர்ந்த அரசு பஸ்கள், வில்லிசேரியில் நிற்காமல் செல்வதால், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

எனவே வில்லிசேரியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி, வருகிற 3-ந்தேதி வில்லிசேரி பஸ் நிறுத்தம் முன்பு நாற்கரசாலையில் மறியலில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர்.

இதையடுத்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. தலைமையிடத்து துணை தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர் கனி, கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், அரசு போக்குவரத்து கழக பணிமனை என்ஜினீயர் ராஜசேகரன் மற்றும் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு, நெல்லை செல்லும் அரசு பஸ்கள் வில்லிசேரியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும். அங்கு பஸ்கள் நின்று செல்வதை கண்காணிக்க அலுவலர் நியமிக்கப்படும். வில்லிசேரியில் இருந்து பஸ்சில் ஏறும் பயணிகளுக்கு அதற்குரிய கட்டணமே வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. கோவில்பட்டியில் இருந்து அகிலாண்டபுரத்துக்கு மதியம் 3 மணிக்கு புறப்படும் பஸ்சை, மாணவர்களின் வசதிக்காக 3.30 மணிக்கு மாற்றி புறப்பட ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வருகிற 3-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story