திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஞானதிரவியம் எம்.பி. - இன்பதுரை எம்.எல்.ஏ. பங்கேற்பு


திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஞானதிரவியம் எம்.பி. - இன்பதுரை எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Aug 2019 3:15 AM IST (Updated: 31 Aug 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., இன்பதுரை எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ளது திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடியாகும். சமீபத்தில் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக கடந்த 11-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

இதையடுத்து கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று கொடுமுடியாறு அணையில் இருந்து நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர்.

படலையான் கால்வாய், வள்ளியூரான் கால்வாய்களில் வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏர்வாடி, வள்ளியூர் பகுதியில் உள்ள 44 குளங்களும், 5,780.1 ஏக்கர் விளை நிலங்களும் பயனடைகிறது.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் உதயசேகர், மதன சுதாகரன், உதவி பொறியாளர் மூர்த்தி, நாங்குநேரி தாசில்தார் ரஹமத்துல்லா மற்றும் அரசு அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story