கே.எஸ்.அழகிரி வருகை: நாங்குநேரியில் 6-ந்தேதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் - ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி
நாங்குநேரியில் வருகிற 6-ந்தேதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறார் என்று முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார். இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை,
நாங்குநேரியில் வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சி நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அங்குள்ள சுப்புலட்சுமி மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி பேசுகிறார். இந்த கூட்டத்தில் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
நாங்குநேரி சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி ஆகும். எனவே அங்கு காங்கிரஸ் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அனைத்து காங்கிரசாரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மூப்பனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி. துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மூப்பனார் உருவ படத்துக்கு பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிலால் தலைமையில் வர்த்தக அணி சக்சஸ் புன்னகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story