போர் வீரர்களின் நினைவுத்தூண் பராமரிக்கப்படுமா? வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
கரூர் ராயனூரில் உள்ள போர் வீரர்களின் நினைவுத்தூண் பராமரிக்கப்படுமா? என வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்,
கரூர் நகரானது முன்பு வணிக மையமாகவும், விவசாயம் செழுமையாக நடக்கும் பகுதியாகவும் இருந்ததால் சேர, சோழ, பாண்டிய, விஜயநகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. அதிலும் சோழ மன்னர்கள் நீண்ட நாட்களாக ஆட்சி புரிந்ததற்கான சான்றுகள் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களின் கல்வெட்டில் தெரிய வருகிறது. அந்த வகையில் கடந்த 1783-ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த மைசூர் போரின் போது திண்டுக்கல்லை கைப்பற்றிய ஆங்கிலேய படையானது கரூரை கைப்பற்ற வந்து கொண்டிருந்தது. அப்போது கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் திப்புசுல்தான் படைகளுடன் பொதுமக்கள் சேர்ந்து ஆங்கிலேய படையை எதிர்த்தனர். அப்போது ஏற்பட்ட போரில் ஆங்கிலேய லெப்டினன்ட் ஸ்டாலி மற்றும் சில படைவீரர்கள் இறந்தனர். சிலர் காயமடைந்தனர். எனினும் விடாப்பிடியாக போரிட்ட ஆங்கிலேயே படையானது கரூரை கைப்பற்றியது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் கரூர் தன்வசம் ஆனதற்கு ஒரு குறிப்பிட்ட படைவீரர்களின் உயிரை கொடுக்க வேண்டியதாயிற்று என கூறிய ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு கரூர் ராயனூர் பகுதியில் நினைவுத்தூண் எழுப்பினர். மேலும் இந்த நினைவுத்தூணானது கூம்பு வடிவில் வித்தியாசமான வடிவமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது. கரூரில் போர் நடந்ததற்கான ஆதாரமாகவும், வரலாற்று சிறப்பு மிக்கதாகவும் உள்ளது. அதில் உள்ள கல்வெட்டில் மைசூர் போரில் காயமடைந்த மற்றும் இறந்த வீரர்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
திப்புசுல்தான், ஆங்கிலேய வரலாற்றை அறிய ஆர்வமுள்ளவர்கள் பலர் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ராயனூருக்கு வந்து அந்த நினைவுத்துணை பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் கரூரில் உள்ள வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் அதன் சிறப்புகளை கேட்டறிகின்றனர்.
ராயனூரில் ஆங்கிலேயர் சார்பில் வைக்கப்பட்ட போர் நினைவுத்தூண் சிறிய அமைப்பில் இருந்த போதும், அதன் வரலாற்று பின்னணி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மேலும் கரூரில் கோட்டை மேடு பகுதியில் முன்பு கோட்டை இருந்ததற்கும் இந்த தூண் ஒரு சான்றாகும். எனினும் கரூரில் பொக்கிஷமான போர்வீரர்கள் நினைவுத்தூணிற்கு எவ்வித அடையாள குறிப்புகள் இல்லை. வரலாற்றை அறிய விரும்புகிறவர்கள் ராயனூருக்கு சென்று பார்க்கும் போது இடம் தெரியாமல் அலைந்து திரிகின்றனர்.
எனவே அந்த நினைவுத்துணுக்கு தனித்துவ அடையாளம் கொடுத்து, அதன் வரலாற்று பின்னணியை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அந்த நினைவுத்தூணை சுற்றிலும் சீமைக்கருவேலமரங்கள், வேண்டாத செடிகள் முளைத்துள்ளன. மர்ம நபர்கள் சிலர் அந்த இடத்தில் வைத்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அங்கு சில மதுபாட்டில்களும் உடைகப்பட்டு பீங்கான் துண்டுகள் சிதறியபடி கிடக்கின்றன. இன்னும் சிலர் தங்களது சொந்த இடம் போல் கருதி புளி, தேங்காய், வெங்காய வடகம் உள்ளிட்டவற்றை வெயிலில் உலர வைப்பதற்கு பயன்படுத்துவது வேதனை தரும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ராயனூர் போர்நினைவுத்துணை சுத்தப்படுத்தி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story