சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை 6-வது மாடியில் இருந்து குதித்தார்


சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை  6-வது மாடியில் இருந்து குதித்தார்
x
தினத்தந்தி 31 Aug 2019 4:09 AM IST (Updated: 31 Aug 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஒஷிவாராவில் சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இளம்பெண் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

மும்பை ஒஷிவாராவை சேர்ந்த இளம்பெண் பேர்ல் பஞ்சாபி (வயது 25). ஓஷிவாரா லோகண்ட்வாலாவில் உள்ள கென்வுட் என்ற 6 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தாயாருடன் வசித்து வந்தார். பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வீடியோ எடிட்டராக பணிபுரிந்து வந்த பேர்ல் பஞ்சாபி சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் இருந்து வந்தார்.

ஆனால் அவருக்கு நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் வீட்டில் இருக்கும் நேரங்களில் தனது தாயிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்து உள்ளார். இதனால் அவருக்கு மனநல டாக்டர் ஒருவர் மூலம் உளவியல் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பேர்ல் பஞ்சாபி வீட்டில் தாயிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் நள்ளிரவு 12 மணியளவில், திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் கட்டிடத்தின் மொட்டைக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த பேர்ல் பஞ்சாபி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்து கட்டிட காவலாளி மற்றும் குடியிருப்புவாசிகள் ஓடி வந்தனர்.

உடனடியாக அவர்கள் பேர்ல் பஞ்சாபியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் பேர்ல் பஞ்சாபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் 2 முறை தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து பேர்ல் பஞ்சாபியின் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது, “அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். துக்கத்தில் இருக்கும் எங்களது குடும்பத்தினர் அமைதியாக இருக்க அனுமதியுங்கள்” என்று மட்டும் கூறினார்.

Next Story