மோகனூர் பகுதியில், ரூ.90¾ லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
மோகனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.90¾ லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.
மோகனூர்,
மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பள்ளி, குமரிபாளையம், ராசிபாளையம், பரளி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.90.84 லட்சத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் மற்றும் பொதுப்பணித்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியினையும் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பள்ளி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மோகனூர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வரும் பணி, குமரிபாளையம் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் நவலடியான் கோவில் அருகில் மோகனூர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வரும் பணி, ஒருவந்தூர் பகுதியில் மோகனூர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் மணப்பள்ளி ஊராட்சியில் ரூ.1.07 லட்சத்தில் கனகவள்ளி என்பவரது இடத்தில் மாட்டு கொட்டகை அமைக்கப்பட்டு வரும் பணி, ரூ.1.89 லட்சத்தில் பூங்கொடி என்பவரது இடத்தில் ஆட்டு கொட்டகை அமைக்கப்பட்டு வரும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ராசிபாளையம் ஊராட்சியில் ரூ.9. லட்சத்தில் காட்டுபிள்ளையார் கோவில் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணி, ரூ.11.30 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணி, ரூ.1.53 லட்சத்தில் காட்டூர் மயானம் அருகில் கசிவுநீர் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வரும் பணி, ரூ.1.25 லட்சத்தில் கருங்கல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.9.80 லட்சத்தில் ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து பரளி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மல்லுமாச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி, ரூ.5 லட்சத்தில் போடிநாய்க்கன் பகுதியில் சிறுபாசன குளம் ஆழப்படுத்தப்பட்டு வரும் பணி, ரூ.5 லட்சத்தில் கவுண்டர் ஏரியில் சிறுபாசன குளம் ஆழப்படுத்தப்பட்டு வரும் பணி என மொத்தம் ரூ.90.84 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கோ.மலர்விழி, மோகனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.குணாலன், எஸ்.ஏ.சேகர், ஒன்றிய பொறியாளர் கலாவதி, உதவி பொறியாளர் முத்துகுமார் உள்பட பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story