மணல் லாரிகளை பிடித்தேன் என்று எம்.பி. கூறுகிறார்: நாமக்கல் மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை
மணல் லாரிகளை பிடித்தேன் என்று சின்ராஜ் எம்.பி. கூறுகிறார். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2 முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முதலீடு பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை சந்திக்கும்போது இன்னும் அதிக முதலீடு வர வாய்ப்பிருக்கிறது. சுகாதார துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் இன்னும் அதிக முதலீடு வர வாய்ப்புள்ளது.
எதிர்கட்சிகளை பொறுத்தவரை வேறு காரணம் எதுவும் அரசை எதிர்ப்பதற்கு இல்லாததால் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறுகின்றனர்.
நாமக்கல் சின்ராஜ் எம்.பி. மணல் லாரிகளை பிடித்தேன் என்று கூறி வருகிறார். ஏற்கனவே நாமக்கல்லில் நடந்த விழாவில், நாமக்கல் மாவட்டத்தில் எந்த ஒரு சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை. மணல் திருட்டு, லாட்டரி, சந்துகடை மதுவிற்பனை என்று எதுவும் இல்லை என்று கூறினேன். சின்ராஜ் எம்.பி. 2 முறை மணல் லாரிகளை பிடித்துள்ளார்.
ஒருமுறை கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் இருந்து வந்த லாரி, மற்றொரு முறை திருச்சியில் இருந்து வந்த லாரி. அந்த லாரிகளில் முறைகேடாக மணல் கொண்டு வரப்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அதேபோல சட்டவிரோத செயலை கண்டிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் போலீஸ் நிலையத்துக்கு சென்று மணல் லாரி டிரைவரை நான் விசாரிக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு அழகல்ல. சட்டம் தன் கடமையை செய்யும்.
நன்செய்இடையாறு பகுதியில் அவருக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் இவ்வாறு அவர் செய்கிறார். தன் அதிகார எல்லை தெரியாமல் போலீஸ் நிலையத்துக்கு சென்று தகராறு செய்கிறார். அதனுடைய பாதிப்பை அவர்தான் அனுபவிப்பார்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
Related Tags :
Next Story