ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல்; இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை


ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது தாக்குதல்; இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 30 Aug 2019 10:30 PM GMT (Updated: 30 Aug 2019 11:03 PM GMT)

சேலத்தில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறி அவரை கண்டித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தை நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.

சேலம், 

சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயல்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர், அப்பகுதியில் வெள்ளி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பட்டறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்கள் அடிக்கடி திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன், பட்டறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கடையில் வேலை செய்து வரும் 17 வயதான சிறுவன் ஒருவன், வெள்ளி பொருட்களை திருடி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுவனை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுக்க நேற்று இரவு முருகன் வந்தார். அப்போது, அவரது கார் டிரைவரான கதிர்வேலும் உடன் வந்துள்ளார். இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.

இந்தநிலையில், போலீஸ் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேலிடம், வெள்ளி வியாபாரி முருகன் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், பட்டறையில் வேலை செய்து வரும் 17 வயதான சிறுவன், இதுவரை 8 கிலோவுக்கு மேல் வெள்ளி பொருட்களை திருடியதாகவும், இதனால் அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும், அங்கு நின்றிருந்த கதிர்வேல் இன்ஸ்பெக்டரிடம் கூறும்போது, வெள்ளி பொருட்களை திருடிய சிறுவனை கைது செய்து அவன் திருடிய வெள்ளி பொருட்களை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.

அதற்கு வெள்ளி வியாபாரியே? பேசாமல் இருக்கிறார். நீ ஏன் இவ்வளவு பேசுகிறாய்? என்று அவரிடம் இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார். இதனால் அவருக்கும், இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர், கதிர்வேலை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளி திருடிய சிறுவனை பிடித்து போலீசில் ஒப்படைக்க வந்தபோது, புகார் மனு கொடுக்க வந்தவரை இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கு தெரியவந்ததால் அவர்கள் உடனடியாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும், போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் சேலத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் மனு கொடுக்க வந்த ஒருவரை இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல், தரக்குறைவாக பேசியதாகவும், இதனால் அவரை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story