திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
ஆரணி,
ஆரணி நகரில் உள்ள 33 வார்டுகளுக்குட்பட்ட ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானம் அருகில் முதல் - அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இல.மைதிலி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார், நகராட்சி பொறியாளர் கணேசன், அலுவலக மேலாளர் நெடுமாறன், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வக்கீல் கே.சங்கர், மாவட்ட நுகர்பொருள் பண்டக சாலை தலைவர் கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோவிந்தராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் தியாகராஜன் வரவேற்றார்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் குறை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில், “சைதாப்பேட்டை அனந்தபுரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியை வரும் கல்வி ஆண்டு முதல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. ஆரணி நகரில் மக்களின் ஆரோக்கிய நலன் கருதி கோட்டை மைதானம் சுற்றிலும் நடைபயிற்சி மேடை அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
அதைத் தொடர்ந்து பெரியகடை வீதி, அருணகிரிசத்திரம், சுப்பிரமணியர் கோவில் தெரு, பாரதியார் தெரு, சைதாப்பேட்டை பஸ் நிறுத்தம், பள்ளிகூடத் தெரு உள்ளிட்ட 7 இடங்களில் 33 வார்டுகள் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் இருந்து குறை மனுக்கள் பெறப்பட்டன.
இதில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story