டீக்கடையிலும் கால் பதித்தது ‘சுவைப்’ எந்திரம்: ‘சில்லரை தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு’ என்கிறார் டீக்கடைக்காரர்


டீக்கடையிலும் கால் பதித்தது ‘சுவைப்’ எந்திரம்: ‘சில்லரை தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு’ என்கிறார் டீக்கடைக்காரர்
x
தினத்தந்தி 31 Aug 2019 5:00 AM IST (Updated: 31 Aug 2019 4:54 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் ஒரு டீக்கடையில் சுவைப் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சில்லரை தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது என்று டீக்கடைக்காரர் கூறினார்.

அவினாசி,

ஒரு சினிமா படத்தில் நடிகர் கருணாசும், அவரது நண்பர் ஒருவரும் டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிப்பார்கள். யார் முதலில் டீ குடித்தாலும் பணம் கொடுக்க வேண்டுமே என்பதற்காக, ‘டீ ரொம்ப சூடாக இருக்குதுப்பா’ என இருவரும் கூறிக்கொண்டே டீ கிளாசை ஆற வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். காலையில் டீ குடிக்க வந்தவர்கள் மாலை நேரமாகியும் டீ குடிக்காமல் டீ கிளாசை ஆற வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது போல காட்சி இருக்கும். கடைசியில் டீக்கடைக்காரர், ‘இன்னைக்கு வியாபாரத்தை கெடுத்திட்டீங்களே’ என்று அடுப்பில் வைத்த வெந்நீரை எடுத்து அவர்கள் 2 பேர் மீதும் ஊற்றுவார். அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிப்பார்கள். இது ஒரு சினிமா படத்தில் வரும் நகைச்சுவை காட்சி.

ஓட்டலில் சாப்பிட சென்றவர்கள் பணம் இல்லாமல் மாவு அரைக்கும் எந்திரத்தில் வேலை செய்வது போல் சினிமா காட்சிகளிலும் இடம் பெற்று இருக்கிறது. நடைமுறையிலும் பணம் இல்லாமல் ஓட்டலில் சாப்பிட்டவர்கள் அங்கு வேலை பார்த்த சம்பவங்களும் உண்டு. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் தங்கள் பர்சுகளில் பணத்தை வைப்பதில்லை. அதற்கு பதிலாக கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் தான் அதில் இடம் பெற்று உள்ளன.

மத்திய அரசும் பணமில்லா வர்த்தகத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. ரொக்கமாக பணத்தை எடுத்து செலவழிப்பதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக வர்த்தகம் மேற்கொள்ளுமாறு பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. இந்த வகையில் படிப்படியாக மக்களும் பணமில்லா வர்த்தகத்தை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

முன்பெல்லாம் பெட்ரோல் பங்கில் தான் சுவைப் எந்திரம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு வந்தனர். அதன்பிறகு இந்த சுவைப் எந்திரம் படிப்படியாக பெரிய, பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், விடுதிகளில் இடம் பிடித்தது. வாடிக்கையாளர்கள் கடன் சொல்வதை தவிர்க்கும் பொருட்டு சின்ன, சின்ன மளிகை கடைகளிலும், பெட்டிக்கடைகளிலும் இந்த சுவைப் எந்திரம் வந்து விட்டது. முகசவரம் செய்யக்கூடிய சலூன் கடையிலும் சுவைப் எந்திரம் பயன்பாட்டில் வந்து விட்டது. இப்போது டீக்கடையிலும் அந்த சுவைப் எந்திரம் கால் பதித்து உள்ளது பணமில்லா வர்த்தகத்தை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே கோவை ரோட்டில் வெங்கடாசலம்(வயது 51) என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். சிமெண்டு கூரை வேய்ந்த இவரது டீக்கடையில் காலையில் இட்லி, தோசை உள்ளிட்ட டிபன் வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. இவரது டீ கடையில் வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெறுவதற்காக சுவைப் எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. அது பற்றி அவர் கூறியதாவது:-

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் எங்களது டீக்கடை செயல்பட்டு வருகிறது. 3 தலைமுறைகளாக இந்த டீக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது நானும், எனது மனைவி கவிதா, தாயார் அங்காத்தா ஆகியோரும், ஒரு சமையலர் உதவியுடன் டீக்கடையை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டு காலமாக எங்களது டீக்கடையில் சுவைப் எந்திரம் மூலம் வாடிக்கையாளரிடம் பணம் பெற்று வருகிறோம். பிரதமர் நரேந்திரமோடி, பணமில்லா வர்த்தகத்தை மேற்கொள்ள அறிவுரை வழங்கியதை தொடர்ந்து எங்கள் டீக்கடையிலும் சுவைப் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறோம்.

தினசரி 20 வாடிக்கையாளர்கள் இந்த சுவைப் எந்திரத்தை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலர் பணத்தை எடுத்து வர மறந்து விடுகிறார்கள். தாங்கள் சாப்பிட்ட டீ, போண்டாவுக்கு பணம் இல்லையே என மன கவலைப்பட வேண்டாம். உடனே தங்களிடம் உள்ள கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் சுவைப் எந்திரம் மூலம் பணம் செலுத்தி விடலாம். சில வாடிக்கையாளர்களிடம் 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் தான் இருக்கும். சில்லரை இருக்காது. அவர்களும் இந்த சுவைப் எந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் சில்லரை தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகிறது. எங்களை போன்று அனைத்து சின்ன, சின்ன கடைக்காரர்களும் பணமில்லா வர்த்தகத்தை மேற்கொள்ள சுவைப் எந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story