பாசன பகுதிகளில் தண்ணீர் திருட்டை தடுக்க குழு அமைக்க வேண்டும்: வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


பாசன பகுதிகளில் தண்ணீர் திருட்டை தடுக்க குழு அமைக்க வேண்டும்: வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2019 5:07 AM IST (Updated: 31 Aug 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பாசன பகுதிகளில் தண்ணீர் திருட்டை தடுக்க குழு அமைக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பவானி பாசனங்களுக்கான நீர் அளவு காவிரி தீர்ப்பில் வரையறை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கீழ்பவானி பாசனத்திற்கு 27.95 டிஎம்சி. எனவும், பழைய பவானி பாசனங்களுக்கு 8.13 டிஎம்சி. எனவும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கூடினாலும், குறைந்தாலும் இந்த விகிதாச்சார அடிப்படையில் தான் நீர் பங்கீடு இருக்க வேண்டும். ஒரு பாசனத்திற்கான உரிமை நீரை இன்னொரு பாசனத்துக்கு கொடுத்தால் பாதிப்பிற்குள்ளான பாசனப்பகுதி பாலைவனமாகும். ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சிக்கோட்டையில் இருந்து சுத்தமான குடிநீர் கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதே சமயம் அறச்சலூர் பகுதிக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து மாசு கலந்த தண்ணீர் வினியோகம் செய்வது சரியா?

சாய-சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து பூஜ்ஜிய நிலையில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதாக கூறுகிறார்கள். அப்படி இருக்கும் போது எதற்காக ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோடு மாநகர் பகுதிக்கு குடிநீர் கொண்டு வர வேண்டும். காலிங்கராயன் பாசனத்துக்கு கடந்த 11-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பருவம் தவறி தண்ணீர் திறக்கப்பட்டதால் மஞ்சள், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்யமுடியவில்லை.

விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் உரம், பூச்சுக்கொல்லி மருந்தின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. அந்த அளவிற்கு விவசாய விளை பொருட்களின் விலை உயரவில்லை. எனவே விவசாய பொருட்கள் அனைத்துக்கும் கட்டுபடியாகும் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். கொடிவேரி முதல் காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு வரை 5 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

ஈரோடு அருகே உள்ள எல்லப்பாளையம் குளத்தில், அங்கு செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் கழிவுகளை கலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளிடம் இருந்து கரும்பை வெட்டிக்கொண்டு கடந்த 3 மாதங்களாக பணம் கொடுக்கவில்லை. இதுவரை ரூ.54 கோடி பாக்கி வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் அடுத்து விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், அந்தியூர் பகுதியில் செயல்பட்டு வந்த 27 கல்குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது டி.என்.பாளையம் பகுதியில் மட்டும் 3 கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் மூடப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் திறக்க பரிசீலனை நடந்து வருவதாக தெரிகிறது. எனவே மூடப்பட்ட கல்குவாரிகளை எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கக்கூடாது.

ஈரோடு மாவட்டத்தில் பாசன பகுதிகளில் தண்ணீர் திருட்டு என்பது கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்காக விவசாயிகள் எவ்வளவோ போராடியும் தண்ணீர் திருட்டை தடுக்க முடியவில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் பவானி ஆற்றில் தண்ணீரை திருடக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டும் உள்ளது. மேலும் இதற்கு மேல்முறையீடும் கிடையாது. அப்படி இருந்தும் தொடர்ந்து தண்ணீர் திருடப்பட்டு வருவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தண்ணீர் திருடுவதை தடுக்க குழு அமைக்க வேண்டும்.

கொப்பு வாய்க்கால் சட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். குளம், ஏரி, குட்டைகளில் மண் அள்ளும் உரிமத்தை வருகிற செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும். மஞ்சள் பயிர்காப்பீடு செய்தவர்களுக்கு இன்னும் காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ளது.

மேட்டூர் அணையின் மேற்கு பகுதியும், ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதியான அந்தியூர், பவானி தாலுகாக்களில் தண்ணீர் பஞ்சம் தொடர்ந்து நிலவி வருகிறது. தற்போது இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 800 அடி முதல் 1,100 அடி வரை சென்றுவிட்டது. மேலும் இங்குள்ள ஏரிகள், குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

எனவே மேட்டூர் அணையின் மேற்கு கால்வாய் திட்டத்தை செயல்படுத்தினால் இந்த பகுதியில் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலம் பாசன வசதி பெறும். காவிரி கரையோர பகுதிகளில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.

அதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மற்றும் அதிகாரிகள் பேசினார்கள்.

Next Story