திருச்சி-விருத்தாசலம் இடையே மின்சார ரெயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
திருச்சி-விருத்தாசலம் இடையே மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சி,
ரெயில்வேயில் ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு ரெயில்வேயில் தமிழகத்தில் பெரும்பாலான பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டன. தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் இருந்து சென்னைக்கும், தென்மாவட்டத்திற்கும், கரூர் மார்க்க பாதையிலும் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் திருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் திருச்சி-புதுக்கோட்டை மார்க்க பாதையும் மட்டும் மின்மயமாக்கப்படாமல் உள்ளது. இந்த பாதையையும் மின்மயமாக்க, பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதால் திருச்சியில் இருந்து விருத்தாசலம் இடையே மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:-
திருச்சியில் இருந்து அரியலூருக்கு நேரடியாக ரெயில் சேவை எதுவும் இல்லாமல் உள்ளது. விருத்தாசலம், சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் இந்த வழித்தடங்களில் உள்ள முக்கியமான ரெயில் நிலையங்களுக்கு செல்லவும் ரெயில் வசதி குறைவு தான். பயணிகள் ரெயில்களும் அதிக அளவில் இல்லை. விழுப்புரம்-திருச்சி இடையே இரட்டை ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று அப்போது இருந்த ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். குறிப்பாக திருச்சி-விருத்தாசலம் இடையே மின்சார ரெயில் இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. மின்சார ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறுவதாகவும் இருந்தது. ஆனால் அந்த சோதனை ஓட்டம் கைவிடப்பட்டது. அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை போல திருச்சி-விருத்தாசலம் இடையே மின்சார ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் இயக்கப்படாத நேரத்தை கணக்கிட்டு இயக்கினால் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக ரெயில்வே வட்டாரத்தில் விசாரித்த போது, திருச்சிக்கு ஒரு மின்சார ரெயில் ஒதுக்கப்பட்டு சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதனை இயக்குவது பற்றி தற்போது எந்த தகவலும் இல்லை, என்றனர்.
Related Tags :
Next Story