மறைமலையடிகள் சாலையில், உள்ள பிரபல ஓட்டல், ஓய்வு பெற்ற பெண் நீதிபதியிடம் ஒப்படைப்பு; கோர்ட்டு நடவடிக்கை
புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டல் கோர்ட்டு நடவடிக்கையின் பேரில் ஓய்வு பெற்ற பெண் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலை மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவராக உள்ள எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் ஏற்கனவே நிர்வகித்து வந்தார். கடந்த 31.10.2011 அன்று அந்த ஓட்டலை குமாரவேல் என்பவருக்கு விற்பனை செய்தார்.
அந்த ஓட்டலை வாங்கிய அவர், அந்த சொத்தின் பேரில் தேசிய வங்கி ஒன்றில் கோடிக் கணக்கில் கடன் பெற்றார். ஆனால் அவர் கடன் தொகையை சரியாக பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் எம்.ஏ.எஸ். சுப்ரமணியத்தின் உறவினர்கள் மற்றும் ஓட்டல் பங்குதாரர்கள் சென்னையில் உள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடுத்தனர். அதில், மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டலை விற்பனை செய்த எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் தங்களுக்கு உரிய பங்கு தொகையை வழங்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓட்டலை எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் விற்பனை செய்தது செல்லாது என்று உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாணையத்தில் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் மேல் முறையீடு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தற்போது அங்கு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு, ஓய்வு பெற்ற புதுவை நீதிபதி மார்க்ரெட் ரோஸ்லினை நிர்வாகியாக நியமித்து அவரிடம் அந்த ஓட்டலை ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று கோர்ட்டு ஊழியர்களுடன் வந்த மார்க்ரெட் ரோஸ்லினியிடம் அந்த தனியார் ஓட்டல் ஒப்படைக்கப்பட்டது.
அந்த ஓட்டல் மற்றும் அங்குள்ள ஜூவல்லரி, அழகு சாதன நிலையம், உணவு விடுதி ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பூட்டு போட்டு பூட்டினார். அப்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story