காண்டிராக்டர்களை பிச்சை எடுக்க வைத்தது என்.ஆர். காங்கிரஸ் அரசு - அமைச்சர் நமச்சிவாயம் பகிரங்க குற்றச்சாட்டு
காண்டிராக்டர்களை பிச்சை எடுக்க வைத்தது என்.ஆர்.காங்கிரஸ் அரசுதான் என்று அமைச்சர் நமச்சிவாயம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி, -
புதுவை சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
அசனா (அ.தி.மு.க.): பொதுப்பணித்துறைக்கு தொகுதிவாரியாக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது? நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு?
அமைச்சர் நமச்சிவாயம்: பொதுப்பணித்துறையில் தொகுதிவாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. பிராந்திய வாரியாக மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. அனைத்து பிராந்தியத்தில் உள்ள ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப்புள்ளி மூலமாக மேற்கொள்ளப்பட்ட பணிக்கான நிலுவைத்தொகை ரூ.41.33 கோடியை இந்த நிதியாண்டில் வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. தற்போது காரைக்காலில் மார்க்கெட் கட்டும் பணி, குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
திருமுருகன் (என்.ஆர்.காங்): எல்லாம் மத்திய அரசின் திட்டம்தான் அது. மாநில அரசின் திட்டம் எது?
அமைச்சர் நமச்சிவாயம்: மத்திய அரசின் திட்டம் என்றாலும் அதில் மாநில அரசின் பங்கு 40 சதவீதம் உள்ளது.
எம்.என்.ஆர்.பாலன்: பிராந்திய ரீதியாக ஏன் பணம் ஒதுக்குகிறீர்கள்? மக்கள்தொகை அடிப்படையில் நிதி ஒதுக்குங்கள். 3 லட்சம் மக்களிடம் வரியை வசூலித்து 30 ஆயிரம் மக்களுக்கு செலவிடுவதா? இதை அனுமதிக்கக் கூடாது.
திருமுருகன்: காரைக்காலில் காண்டிராக்டர்களுக்கு தற்போது ரூ.19 கோடி தரவேண்டி உள்ளது. அரசு பணம் தராததால் அவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: இதையெல்லாம் யார் செய்தது? அவர்களை பிச்சை எடுக்க வைத்தது நீங்கள் (என்ஆர்.காங்கிரஸ் ஆட்சி). 5 வருடமாக நீங்கள்தானே ஆட்சி செய்தீர்கள்? அப்போது ஏன் சொல்லவில்லை?
திருமுருகன்: நீங்கள் இருக்கும்போது எவ்வளவு தொகையை விட்டுவிட்டு போனீர்கள்?
அமைச்சர் நமச்சிவாயம்: எந்தெந்த வருடத்தில் எவ்வளவு பாக்கி என்பதை எழுத்துப்பூர்வமாக தருகிறேன்.
திருமுருகன்: காண்டிராக்டர்களுக்கு எவ்வளவு பணம் பாக்கி உள்ளது?
அமைச்சர் நமச்சிவாயம்: காண்டிராக்டர்களுக்கு ரூ.120 கோடி பாக்கி உள்ளது. அதில் கடந்த ஆட்சிக் காலத்தில்தான் அதிகமாக வழங்கப் படாமல் உள்ளது. ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.43.33 கோடிக்குத்தான் வேலைகள் நடந்துள்ளது. மற்றவை நியமன அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. தலைமை பொறியாளரிடம் ஒப்புதல் பெறப்பட்டு சில வேலைகள்தான் நடந்துள்ளது. ஒப்புதல் பெறாமல் பல கோடிக்கு வேலைகள் நடந்துள்ளது. முறையாக அரசிடம் அனுமதிபெற்று செய்யப்பட்ட வேலைக்கு ரூ.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணம் அவர்களை சென்று சேரும். மற்றதை எப்படி செய்வது என்று பின்னர் முடிவெடுக்கப்படும்.
எம்.என்.ஆர்.பாலன்: அனுமதி பெறாமல் செய்யப்பட்ட வேலைகள் தொடர்பாக விசாரணை வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: அந்த அதிகாரிகள் எல்லாம் ஓய்வுபெற்று சென்றுவிட்டனர். டெண்டர் விடப்பட்டு புதுச்சேரியில் 23.96 கோடிக்கும், காரைக்காலில் 7.55 கோடிக்கும், மாகியில் ரூ.3.57 கோடிக்கும், ஏனாமில் 6.75 கோடிக்கும் மட்டுமே வேலை நடந்துள்ளது.
அன்பழகன்: புதுச்சேரியுடன் சேர்ந்த மாவட்ட பகுதிகள் மாகியும், ஏனாமும் அப்படி இருக்க ஏன் பிராந்திய வாரியாக பிரிக்கிறீர்கள்? நான் முட்டாள் எம்.எல்.ஏ. எனக்கு புரியும்படி கூறுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: நாங்கள் புதிதாக எதையும் பிரிக்கவில்லை. ஏற்கனவே இருந்த அறிவாளிகள்தான் பிரித்தது.
எம்.என்.ஆர்.பாலன்: திருபுவனை தொகுதியில்தான் வேலைகள் நடக்கிறது. அமைச்சரை கேட்டால் அதிகாரிகள் எங்களை மதிக்கவில்லை என்கிறார். எப்படித்தான் அங்கு வேலை நடக்கிறது.
கோபிகா (என்.ஆர்.காங்): அதிகாரிகளை அணுகி வேலைகளை செய்யுங்கள்.
பாலன்: பிராந்தியங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி வேலை நடக்கிறது. ஆனால் புதுவையில் சரிவர நடப்பதில்லை. பிராந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி: பிராந்திய ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றால் சபைதான் முடிவெடுக்கவேண்டும்.
சிவா: எனது தொகுதியில் 10 வேலை கொடுத்தால் 2 வேலைகூட நடக்கவில்லை. புதுவை முழுக்க வளர்ச்சி இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story