கூடலூர் அருகே கடைகளை சேதப்படுத்திய காட்டு யானை: பொதுமக்கள் பீதி


கூடலூர் அருகே கடைகளை சேதப்படுத்திய காட்டு யானை: பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 1 Sept 2019 4:30 AM IST (Updated: 31 Aug 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கடைகளை காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் வனப்பகுதியில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இதில் காட்டுயானைகள் தண்ணீர், உணவுத்தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசம் செய்து வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டுயானைகள் திடீரென வீடுகளை முற்றுகையிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல், வடவயல், அம்பலவயல் உள்பட பல இடங்களில் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை மிதித்து அட்டகாசம் செய்தன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் முதுமலை கரையோரம் தோண்டப்பட்டுள்ள அகழியை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் புழம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை புகுந்தது.

பின்னர் அப்பகுதியில் முருகன் என்பவரது மளிகை கடையை சூறையாடியது. இதில் கடையின் மேற்கூரை சேதம் அடைந்தது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதேபோல் முக்கூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது கடையின் இரும்பு ஷட்டரை காட்டு யானை சேதப்படுத்தியது. ஒரே நாள் இரவில் காட்டு யானையின் தொடர் தாக்குதல்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் காட்டு யானைகளை ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். இல்லை எனில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து மண்வயல் வியாபாரிகள் சங்க துணை செயலாளர் மணி கூறியதாவது:-

காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. வனத்துறையினர் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளை விரட்ட வேண்டும். சேதம் அடைந்த கடைகளுக்கு உரிய நஷ்டஈடு தொகை வழங்க வேண்டும்.

பட்டா நிலத்தில் பயிரிட்டுள்ள விவசாய பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே பட்டா இல்லாத நிலத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகளின் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தினால் இழப்பீடு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி கலெக்டர், ஆர்.டி.ஓ.விடம் முறையிடப்படும்.

மேலும் போராட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story