மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு


மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 1 Sept 2019 5:00 AM IST (Updated: 1 Sept 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

தனவேலு: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வாயிலாக பாகூர் தொகுதியில் உண்டு உறைவிடப்பள்ளி அமைத்திட அரசு முன்வருமா?

அமைச்சர் கந்தசாமி: தற்போது அத்தகைய திட்டம் அரசிடம் ஏதுமில்லை.

தனவேலு: பாகூர் கொம்யூனில் பாகூர் தலைமையிடம் போன்றது. அங்கு ஏன் கொண்டுவரவில்லை. ஏம்பலம் தொகுதிக்கே எல்லாவற்றையும் நீங்கள் கொண்டு செல்வதுபோல் தெரிகிறது.

அமைச்சர் கந்தசாமி: பாகூரில் இடம் தந்தால் செய்யலாம்.

தனவேலு: உங்களிடம் சண்டைபோட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் கல்விக்கடன் ஏதும் வழங்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை உள்ளவர்களிடம் அந்த துறையை ஒப்படைக்கவேண்டும்.

அமைச்சர் கந்தசாமி: நான் அனைத்து துறை சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும்தான் திட்டங்களை செயல்படுத்துகிறேன். எனக்கு பிற்படுத்தப்பட்டோர்தான் அதிக அளவில் வாக்களித்தார்கள்.

தனவேலு: அமைச்சர் இந்த விஷயத்தில் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

எம்.என்.ஆர்.பாலன் (காங்): அந்த துறையின் இயக்குனர் பாரபட்சமாக செயல்படுகிறார். அவரை ஏன் மாற்றக்கூடாது. கடந்த ஆட்சியில் இயக்குனர்களாக இருந்தவர்கள்தான் இப்போதும் உள்ளனர். அப்படியிருக்க தவறு செய்தவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஒரு அமைச்சரை கேட்டால் அதிகாரி ஓய்வுபெற்றுவிட்டார் என்கிறார். ஓய்வுபெற்றால் என்ன அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.

அமைச்சர் கந்தசாமி: தற்போது சமூக பிரச்சினையை கிளப்பிவிட்டார்கள். கவர்னர் கோப்புகளை நேரடியாக வாங்கி கடனை வசூலியுங்கள் என்கிறார். நான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. எந்த சமூகத்துக்கும் நான் விரோதமானவனல்ல.

என்.எஸ்.ஜே.ஜெயபால் உங்களுக்குத்தான் கோர்ட்டு அதிகாரம் வழங்கியுள்ளதே. பிறகு ஏன் கவர்னரைப்பற்றி பேசுகிறீர்கள்?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: கல்விக்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story